×

பகவத்கீதை எல்லா மதத்தினருக்கும் பொதுவானது: அண்ணா பல்கலையில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது...ஆளுநர் கிரண்பேடி கருத்து

புதுச்சேரி: இன்ஜினியரிங் கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்ப கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்  (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல், மேம்படுத்துதல் பணிகளை மேற்கொண்டு  வருகிறது. ஏஐசிடிஇ வடிவமைக்கும்  பாடத்திட்டத்தை இன்ஜினியரிங் கல்விக்கான உயர் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள  கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை பல்கலைக்கழக நிர்வாகமே வடிவமைக்கிறது. இந்நிலையில் 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட  வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம் சாராத 32 பாடங்களில் 3 பாடங்களை விருப்பப்பாடமாக  தேர்வு செய்து 3வது, 4வது, 5வது செமஸ்டரில் படிக்க வேண்டும் கூறியிருந்தது. சமுதாயத்தில் தொழில்நுட்பகல்வி, மதிப்புகள் மற்றும் தர்மம்,  தர்மமும் சிறந்த வாழ்க்கை முறையும், புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்துதல் என 32 பாடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, ஸ்கூல் ஆப் ஆர்க்டெக்சன் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ்  ஆப் இன்ஜினியரிங், குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 4 கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த  மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர். அதில் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) மாணவர்கள் மொத்தமுள்ள 12  பாடங்களில் தத்துவவியல் பாடத்தை  தேர்வு செய்தனர். தத்துவியல் பாடத்தின் 5வது யூனிட்டில் ‘‘அறிவே ஆற்றல்’’ என்ற தலைப்பில் நம்முடைய  ஆற்றலை உணர்வது தொடர்பாக கீதையில் கூறப்பட்டுள்ளவை, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அர்ஜூனனுக்கு கிருஷ்ணரின் உபதேசங்கள்  ஆகியவை கொண்ட பகவத்கீதையை பாடமாக உள்ளது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று பகவத்கீதையை பாடமாக கொண்டு வந்ததற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு  எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் சென்னை  சைதாப்பேட்டை சின்னமலை அருகில் நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அண்ணா  பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை போலீசார் பேரிகார்டு தடுப்பு வைத்து  நிறுத்தி கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை  செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலையில் பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். பகவத்கீதை என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது; ஒரு மதத்தை குறிப்பிட்டு கூறுவது தவறு என்று,  ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுடைய வாழ்வாதாரத்தையும், புரிதலையும் தெரிந்துகொள்ள பகவத்கீதை உதவும் என்று  அவர் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியில் அதிகாரிகளின் உதவியுடன்  டிஜிட்டல் விளம்பர பேனர்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள்,  போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினர் இரவு, பகலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு டிஜிட்டல் பேனர்களை அகற்றியதாகவும், தமிழகத்தில்  டிஜிட்டல் பேனர்களை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாகவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Tags : Karnapedi ,Anna Bhagalla , Bhagavad Gita is common to all religions: It is welcome to join Anna Bhagalla ... Governor
× RELATED ஏனாம் தீவை தாரை வார்க்க முயற்சி;...