×

5,8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டம் 1.4.2010 முதல் அனைத்து  மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிக்கை வெளியிட்டது.  இதன்பேரில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் மேற்கண்ட கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம் தொடர்பான அறிவிக்கை மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி  மாதம் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்வில் தோல்வியுறும்  குழந்தைகள் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தொடக்க கல்வியை முடிக்கும் வரை  எந்த குழந்தையும் பள்ளியில் இரு்ந்து வெளியேற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை அடிப்படையாக கொண்டு, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள,  கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆகியவற்றில் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் 2018-2019ம் கல்வி ஆண்டு  முதல் அரசுப் பொதுத் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டி தொடக்க கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார். தொடக்க கல்வி இயக்குநரின்  கருத்துருவை அரசு பரிசீலனை செய்து அதை ஏற்று 2019-2020ம் கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில்  பொதுத் தேர்வு நடத்த தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5  மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெறுமா? அல்லது 3ம் பருவ பாடத்திட்டத்துக்கு  மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் பருவத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன்  ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Tags : Minister of State ,elections ,Sengottaiyan Interview , Interview of the 5th and 8th general elections this year
× RELATED பாஜ வேட்பாளர் மீது இடதுசாரி கூட்டணியும் புகார்