×

கடையம் அருகே இன்று அதிகாலை பயங்கரம்: அரசு தொகுப்பு வீடு இடிந்தது

கடையம்: கடையம் அருகே இன்று அதிகாலை அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில் தாய், மகள் படுகாயத்துடன் உயிர் தப்பினர். நெல்லை மாவட்டம் கடையம் சரகம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கென்னடி தெருவைச் சேர்ந்தவர் டேனியல்ராஜ்(43). இவரது மனைவி அமுதா(39). இவர்களுக்கு ஆல்ரியன்(18), அஸ்வின்(15) ஆகிய மகன்களும், ஜெபிஷா(14) என்ற மகளும் உள்ளனர். டேனியல்ராஜ் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். மூத்த மகன் ஆல்ரியன் வல்லநாடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக் படித்து வருகிறார். இதற்காக அவர் கல்லூரி ஆஸ்டலில் தங்கி இருக்கிறார். 2வது மகன் அஸ்வின் உள்ளூரில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பும், மகள் ஜெபிஷாவும் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் வீடு மானியத்தில் 25 ஆண்டுக்கு முன் அரசே கட்டிக்கொடுத்ததாகும். தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், வீட்டின் பலம் நாளுக்கு நாள் குறைந்து தற்போது மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் பல தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு அமுதா தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

மகன் அஸ்வின் மட்டும் கட்டிலில் படுத்திருந்தான். தாய், மகள் தரையில் பாய்விரித்து படுத்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். திடீரென்று இவர்களது வீட்டின் மேற்கூரை கட்டி கட்டியாக பெயர்ந்து விழத்தொடங்கிது. கற்கள் விழுந்த இடத்தில் தாய், மகள் படுத்திருந்ததால் இருவர் மீதும்  விழுந்தன. இதனால் அலறியடித்து எழுந்த போதிலும் அவர்கள், முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. இவர்கள் சத்தம் கேட்டு கட்டிலில் படுத்திருந்த மகன் எழுந்து வெளியில் ஓடி அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்தான். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அம்பை அரசு மருத்ருவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிர் பலி வாங்க துடிக்கும் தொகுப்பு வீடுகள்

கடையம் சுற்று வட்டார பகுதியில் இதுபோன்று ஏராளமான அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் உள்ளன. வழக்கமாக நாம் பணம் போட்டு கட்டும் வீடுகள் 50 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கும். அதன்பிறகு சற்று சிதிலமடையும். அதை சீரமைத்து விட்டால் மேலும் 20 ஆண்டுகளுக்கு அந்த கட்டிடத்தை அசைக்க முடியாது. ஆனால் இப்பகுதியில் காலனி வீடுகளாகவும், தனித்தனி வீடுகளாகவும் தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். குறிப்பாக கருத்தைப்பிள்ளையூரில் உள்ள இந்திரா காலனி, கேழையாபிள்ளையூர் அருகே உள்ள அம்பேத்கர் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இரவு, பகல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீட்டின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டு இந்த நிலைக்கு வந்துவிட்டது.
பருவமழை ஐப்பசியில் தொடங்க உள்ள நிலையில் உடனடியாக அரசு கட்டி கொடுத்துள்ள வீடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உயிர் சேதம் ஆகும் முன் அங்குள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து கட்டிடங்களை சீரமைக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : shop ,government house ,State , Debt, horror, government suite
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி