×

மது விருந்துடன் செம ஜாலி: தடைமீறி குற்றாலம் கரடி அருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்

தென்காசி: குற்றாலத்தில் இயற்கை கொடுத்த பெரும் வரப்பிரசாதமாக பல்வேறு அருவிகள் அருகருகே அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி, கரடி அருவி, புது அருவி, விஐபி அருவி என அழைக்கப்படும் பழத்தோட்ட அருவி ஆகியவை அருகருகே அமைந்துள்ளது. இது குமரி முதல் மும்பை வரை நீண்டும், பரந்தும், உயர்ந்தும் காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒரு அதிசயமாகும். வேறு சில புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களில் விழுகின்ற நீர்வீழ்ச்சிகள் கூட குளிக்க முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு நிறைந்து அருவியில் குளிக்க வேண்டாம் என்ற அறிவிப்பு பலகையும் காணப்படும். ஆனால் குற்றாலத்தில் அப்படி இல்லை அனைத்து அருவிகளிலும் தூய்மையான தண்ணீரே கொட்டும். தேனருவி செண்பகாதேவி அருவிகள் மெயின் அருவி தண்ணீரின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி வந்த நிலையில் தற்போது அவை இரண்டுமே அடர்ந்த வனப்பகுதி என்ற காரணத்தை வைத்து தற்போது குளிப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் விஐபிகள் என்பதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் கையில் நபர் ஒருவருக்கு 100 ரூபாய் டிப்ஸ் கொடுத்தால் விஐபி ஆக மாறலாம் என்ற எழுதப்படாத விதிமுறைகளுடன் பழத்தோட்ட அருவி இயங்கி வந்தது. பலரும் பழத்தோட்ட அருவியை வைத்து முறையற்ற வகையில் வருவாய் ஈட்டி வந்த நிலையில் பொதுமக்களின் பெரும் எதிர்ப்பை தொடர்ந்து அந்த அருவி மூடப்பட்டது. இதனால் ஐந்தருவியில் சுத்தமும் சுகாதாரமும் பாதுகாக்கப்பட்டது. தற்போது உள்ள அருவிகளில் சிற்றருவி மட்டுமே கட்டணம் செலுத்தி குளிக்கும் அருவியாக உள்ளது.

மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. சிற்றருவி சட்டபூர்வமாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரடி அருவி என்பது தற்போது சட்டவிரோதமாக வருவாய் ஈட்டும் அருவியாக மாறி வருகிறது என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சமூகவலைதளங்களில் சில நபர்கள் அதாவது வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பகல் வேளைகளில் கூட கரடி அருவியில் சோப்பு ஷாம்பு தேய்த்து குளியல் போடுவது போன்றும் மேலும் மது பாட்டில்கள் உணவு பொட்டலங்கள் போன்றவை ஆங்காங்கே கிடப்பது போலவும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது, பெரும் போராட்டத்திற்கு பிறகு விஐபி நடைமுறை ஒழிக்கப்பட்ட நிலையில் தற்போது கரடி அருவியில் வனத்துறை மூலமாக விஐபி நடைமுறை இரகசியமாக பின்பற்றப்படுகிறதோ என்ற சந்தேகத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பகல் வேளைகளில் அங்கு 2 காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் யாரையும் அங்கு குளிக்க அனுமதிப்பது இல்லை. ஆனால் அதே பகுதியில் சில தனியார் விடுதிகளும் உள்ளது. அவற்றிலிருந்து யாராவது வனத்துறையினரின் கண்ணில் படாமல் வந்து குளித்து விட்டு சென்றிருக்கலாம். மேலும் இரவு வேளைகளில் அங்கு பாதுகாப்பு பணியில் யாரும் ஈடுபடுவதில்லை. அந்த சமயத்தில் கூட வெளியாட்கள் வந்து மது அருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. எப்படி இருந்தாலும் கரடி அருவியில் வெளியாட்கள் குளிப்பது முற்றிலும் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

Tags : party ,Courtallam Bear Falls Wine ,Courtallam Bear Falls ,Sema Jolly , Wine, Brewing, Courtallam, Bear Falls, Tourists
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...