×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை அக்.4ம் தேதி நடைபெறும் : உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ராதாபுரம் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்று
சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

இதையடுத்து, இந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ராதாபுரம் தொகுதியில் 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு எந்திரங்களின் கண்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்.இதற்காக 3 சுற்று வாக்கு எந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் வரும் 4ம் தேதி  11.30 மணிக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை நீதிபதியின் அனுமதியுடன் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஹாலை வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.

 தடைக் கோரி  இன்பத்துரை மனு

இதைத் தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடைக் கோரி அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்துவது சிரமம் என்று கூறி கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்/ இதனையடுத்து நீதிபதி இந்த உத்தரவுக்கு தான் தடை விதிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்பது குறித்தும் வருகிற 3-ம் தேதி வழக்காக விசாரிப்பதாக கூறி அந்த வழக்கின் விசாரணையை 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.  மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை எனக் கூறிய நீதிமன்றம், இன்பதுரையின் மனுவை நிராகரித்தது.மறு வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து நாளை காலை 11.30 மணிக்கு வாக்கு எந்திரங்கள், தபால் வாக்குகள் சமர்ப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து,ராதாபுரம் தேர்தல் வழக்கில் நாளை காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பின் ஆணையம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் நீதிபதி தெரிவித்தார்.


Tags : High Court ,Radhapuram , High Court, Action, Radapuram, Election, Infaturai
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...