×

டெல்லி-கத்ரா நகருக்கு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுடெல்லி: டெல்லி-கத்ரா நகருக்கு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

அதிநவீன வசதிகளுடன் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்

சென்னை ஐசிஎப்பில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் தயாரிக்கப்பட்டது.டெல்லி-வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக சேவையை வரும் 5ம் தேதி தொடங்குகிறது.

ரயிலை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிலையில் டெல்லி-கத்ரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திரா சிங் மற்றும் டாக்டர் ஹர்ஷ வர்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

10 ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் காஷ்மீர் உருமாறும்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் தயாரான இந்த ரயிலை இங்கிருந்து தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.  வேகம், அளவு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளை முன்வைத்து தனது இலக்குகளை அடைவதற்காக ரயில்வே பணியாற்றி வருகிறது என கூறியுள்ளார். சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் பிரிவு 370 ஆனது நீக்கம் செய்யப்படுவதற்கு முன், வளர்ச்சிக்கான வழிகள் தடைப்பட்டு இருந்தன.  அடுத்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு மற்றும் காஷ்மீர் உருமாறும் என்றும் தெரிவித்தார்.


Tags : Amit Shah ,Delhi ,Vande Bharat Express ,Qadra ,Khadra ,Amritsar , Vandebharat Express, Amit Shah, Home Minister, Delhi, Qadra
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...