×

25 நாட்களாக ஒடிந்து கிடக்கும் மின்கம்பம்: கண்டு கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே விளைநிலத்தில் 25 நாட்களுக்கு முன் ஒடிந்து விழுந்த மின்கம்பத்தினை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்யாததால் சப்ளை துண்டிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளிக்குடி அருகே உள்ளது தூம்பக்குளம் புதூர். சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது நெல், சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்யும் இந்த விவசாயிகளுக்கு தற்போது புதிய பிரச்னையாக மின்வாரியம் உருவெடுத்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது தோட்டத்தின் வழியாக செல்லும் மின்கம்பம் இரண்டு அடுத்தடுத்து சேதமடைந்த நிலையில் கடந்த 25 தினங்களுக்கு முன்பு ஒடிந்து வயலில் விழுந்துவிட்டது.

இதனால் இந்த தோட்டத்தை அடுத்துள்ள விவசாயிகளின் விளைநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்சப்ளை இல்லை. இதனால் தூம்பக்குளம் புதூரினைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை தொடரமுடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மின்சப்ளை இல்லாத காரணத்தால் வயலில் நீர்பாய்ச்சமுடியவில்லை. இதுகுறித்து விவசாயி மகாலிங்கம் பெரியசாமி கூறுகையில், மின்கம்பம் ஒடிந்து விழுந்து இன்றுடன் 25 நாட்களாகிறது. இதுகுறித்து பலமுறை திருமங்கலம் தெற்கு மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்துவிட்டோம். தண்ணீர் பாய்ச்ச முடியாததால் புரட்டாசி மாதத்தில் நடவேண்டிய நாற்றங்கால் நடமுடியவில்லை. நெல்விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த நஷ்டம் உண்டாகி வருகிறது. மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

Tags : Electricity Officers , Electricity Officers, Electric
× RELATED தருமபுரியில் மின் இணைப்புக்கு லஞ்சம்...