×

தூத்துக்குடி அருகே விவசாய நிலங்களில் மண் கொள்ளை: லாரி லாரியாக மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விவசாய நிலங்களில் உள்ள மணல்களை கொள்ளையடித்து லாரி லாரியாக கடத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த கல்லாமொழியில் சுமார் 1050 ஏக்கர் பரப்பளவில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த இடம் கடல் மட்டத்தை விட குறைவாக இருப்பதால் அங்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் கொண்டு வந்து நிரப்பும் பணி நடந்து வருகிறது. மண் நிரப்பும் பணிகள் மட்டும் 300 கோடி ரூபாய் செலவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து குடிமராமத்து பணிக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் போலி ரசீதை  பெற்று ஒரு குளம் விடாமல் லாரி லாரியாக இந்த ஒப்பந்ததாரர்கள் மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தகவல் சோனகன்விளையில் இளைஞர் ஒருவர் மீது லாரி ஏறி உயிரிழந்ததால் வெளிச்சத்திற்கு வந்தது. பொதுமக்களின் கடுமையான எதிர்பால், தற்போது மண் கொள்ளைக்கு புது வழி கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து நா.முத்தையாபுரம் கிராமத்தில் தென்னை விவசாயிகளிடம் இருந்து 32 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி மண் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றன. அந்த விவசாய நிலத்தில் மண் வளத்தை மேம்படுத்துவதாக கூறி தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு பொக்லைன் மூலம் 5 அடியில் இருந்து 10 அடி ஆழம் வரை மண்ணை அள்ளி லாரி லாரியாக கடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பக்கத்து கிராமத்திற்கு செல்லும் மின்கம்பங்களை பிடிங்கி எறிந்துவிட்டு லாரி செல்லும் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற இரு வேலையாட்களை நியமித்து இரவும், பகலும் இந்த சட்டவிரோத மண் கடத்தல் நடப்பதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், கடந்த வாரத்தில் மட்டும் 10 லாரிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மண் கடத்தலுக்கு துணை போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால், சாத்தான்குளம் அடுத்த அச்சம்பாடு குளத்தில் ஊர் ஒன்று கை நூறு திட்டத்தில் குடிமராமத்து பணி செய்து தருவதாக ஒப்பந்தம் எடுத்து தனியார் மண்ணை அள்ளி செல்வதாக கூறப்படுகிறது. அத்துடன் கான்கிரீட்டால் ஷட்டர் அமைத்து கொடுக்காமல் மூன்று மாதம் இழுத்தடித்து கடைசியில் மழை கரைந்து  போகும் அளவில் தரமில்லாத மதகு கட்டிக்கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. இந்த மோசமான கட்டுமான பணியால் குளத்தில் தேங்க வேண்டிய நீர் வீணாக கடலுக்கு போய் சேர்ந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பணிகளை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு துணைப்போகும் விதமாக கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : lands ,Thoothukudi ,farmland , Thoothukudi, agricultural land, looting, lorry sand smuggling, public complaints
× RELATED வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம்...