×

நீரோடைகளில் தண்ணீர் வருவதாக கூறி சதுரகிரி செல்ல அனுமதி மறுப்பு

வத்திராயிருப்பு: நீரோடைகளில் தண்ணீர் வருவதாக கூறி, சதுரகிரி செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததால், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் 6 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் திரும்பிச் சென்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு கடந்த மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கோயில் பகுதியில் உள்ள ஆனந்தவள்ளியம்மன் சன்னதியில் 29ம் தேதி காலை நவராத்திரி விழா தொடங்கியதால், அன்று முதல் வரும் 8ம் தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  நவராத்தி விழாவையொட்டி 29ம் தேதி அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு கொலு பஜனை நடைபெற்றது. இந்நிலையில், 29ம் தேதி இரவு கோயில் வனப்பகுதியில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாணிப்பாறையில் இருந்து கோயில் வரை இடையே உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து, கடந்த 30ம் தேதியும், அக்.1ம் தேதியும் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு, தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்காக, நேற்று காலை 5 மணியளவில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன் குவிந்தனர். ஆனால், வனத்துறையினர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை என கூறினர். இதனால், 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பக்தர்கள் வேதனையுடன் திரும்பினர். பக்தர்கள் கூறுகையில், ‘நவராத்திரி விழாவையொட்டி அக்.8ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி இருப்பதால், கோயிலுக்குச் செல்லும் வழியில்  தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்துறை ஆகியோரை நிறுத்தி, பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : streams ,Chaturagiri ,Sathuragiri , Sathuragiri
× RELATED சித்திரை மாத பிரதோஷம் மற்றும்...