குத்துச்சண்டை போட்டியில் குளறுபடி: வெற்றி பெற்றவரை தோல்வி அடைந்ததாக அறிவிப்பு

ஸ்ரீமுஷ்ணம்: குத்துச்சண்டை போட்டியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வெற்றி பெற்ற மாணவியை தோல்வி அடைந்ததாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான குத்துச்சண்டை தெரிவுப்போட்டி நேற்று முன்தினம்  நடந்தது. இதில் 17 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் தமிழகம் முழுவதும் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்குட்பட்டவர்கள் 46 முதல் 48 எடைப்பிரிவில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினி கலந்து கொண்டார்.

இந்த மாணவி இறுதிப்போட்டியில் தகுதி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் நடுவர்கள் ஒருதலை பட்சமாக நடந்துகொண்டு தீர்ப்பளித்ததால் சென்னை எண்ணூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பார்வையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவியின் பயிற்சியாளரும் உடனிருந்தவர்களும் போட்டியை நடத்திய உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் நடுவரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எங்கள் தீர்ப்பு இறுதியானது. எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவித்து கொள்ளுங்கள் என அலட்சிமாக தெரிவித்துள்ளனர். உண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி சுபாஷினிக்கு உரிய நீதி கிடைக்க  மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : boxing match ,Announcement ,winner ,Boxing , Boxing
× RELATED புதிய அறிவிப்பால் அரசு உதவிபெறும்...