×

சிவகங்கை பூங்காவில் இருந்த 3 புள்ளி மான்கள் திடீர் மாயம்?

தஞ்சை: தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்த 3 புள்ளி மான்கள் காணவில்லையென எழுந்துள்ள புகாரால் மாநகராட்சி அலுவலர்கள் பீதி அடைந்துள்ளனர். உலக புகழ்பெற்ற பெரிய கோயில் அருகே சிவகங்கை பூங்கா அமைந்துள்ளது. மிக பழமையான இப்பூங்காவில் மான்கள், மயில்கள், கிளிகள், முள்ளம்பன்றிகள் என பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் சிவகங்கை பூங்கா முற்றிலும் புதுப்பித்து மறுசீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கிருந்த மான்கள் உள்ளிட்ட விலங்குகள் அப்புறப்படுத்தப்பட்டு மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்விலங்குகள் கோடியக்கரை வனத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிவகங்கை பூங்காவில் இருந்து கோடியக்கரையில் விடப்பட்ட மான்களின் எண்ணிக்கையில் 3 மான்கள் குறைந்த மர்மம் குறித்து புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரை சேர்ந்த சரவணன் என்பவர் மாவட்ட வன அலுவலருக்கு கடந்த செப்டம்பர் 20ம் தேதி அனுப்பியுள்ள மனுவில், கடந்த ஜூலை 15ம் தேதி மாநகராட்சிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்ட விவரங்களுக்கு மாநகராட்சி செயற்பொறியாளரும், பொது தகவல் அலுவலருமான ராஜகுமாரன் பதில் அளித்துள்ளார். இதன்படி தஞ்சை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சிவகங்கை பூங்காவில் மொத்தம் 44 புள்ளிமான்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோடியக்கரை வனத்துக்கு அனுப்பிக்கப்பட்டபோது 41 புள்ளிமான்கள் தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் மீதமுள்ள 3 மான்கள் மாயமான மர்மம் என்ன. அவை காணாமல் போனது எப்படி. இறந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என மர்மமாக உள்ளது. இதற்கு யார் பொறுப்பு. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga Park Sivaganga , Sivaganga, deer
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...