×

வழிவிட்டு நிற்க சொன்ன தொழிலாளியை தாக்கி காலை முறித்த போலீஸ்காரர்கள்

திருச்சி: திருச்சி, உறையூர், பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் பிளம்பர் ஜெயக்குமார். இவர் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு வேலையை முடித்துக் கொண்டு தனது மகள் வைஷ்ணவியுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். உறையூர் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கு சில போலீசார் மப்டியில் சாலையை அடைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஜெயக்குமார், வழிவிட்டு நிற்கும்படி போலீசாரிடம் கூறி உள்ளார். இததையடுத்து அவர்கள் தாங்கள் யார் தெரியுமா என கேட்டு ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மப்டியில் இருந்ததால் போலீஸ் என தெரியவில்லை. தொடர்ந்து, நீங்கள் யாராக இருந்தால் என்ன வழிவிட்டு நில்லுங்கள் எனக் கூறியதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெயக்குமாரை போலீசார் தாக்கி வேனில் ஏற்றிச்சென்றதாகவும், இதில் அவரது கால் முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் மீது புகார் அளித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் வளரும் தமிழகம் கட்சி தலைவர் துரைஅரசன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜெயக்குமாரை மப்டியிலிருந்த போலீசார் செல்லபாண்டியன், இளங்கோவன், சுகுமார், அழகுமுத்து மற்றும் சிலர் தாக்கி வேனில் தூக்கிச் சென்றுள்ளனர். அவரை ஜாதியை சொல்லி திட்ட, அவரது வாயில் மதுவை ஊற்றி சித்ரவதைப்படுத்தி உள்ளனர். உடன் சென்ற அவரது மகள் வைஷ்ணவி, தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறியதால் அவர் மீட்கப்பட்டார். இல்லையெனில் அவரை என்ன செய்திருப்பார்களோ தெரியவில்லை. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், டில்லி மற்றும் சென்னை மனித உரிமை ஆணையர், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மாவட்ட சட்ட உதவி மையம், முதல்வர் அலுவலகம் என அனைத்துக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமாரிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், வேலை வாங்கி தருவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு மனுவை வாபஸ் வாங்கும்படியும் மிரட்டியுள்ளார். தவிர அவரது வக்கீல் ஞானமூர்த்தியை நீதிமன்றத்தில் வைத்து புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சங்கர் மூலம் மிரட்டி உள்ளனர்.

போலீசார் தங்கள் மீது உள்ள தவறை மறைப்பதற்காக மேலும் மேலும் தவறு செய்கின்றனர். ஆதாரங்கள் எங்களிடம் வலுவாக உள்ளது. எனவே, ஜெயக்குமாரை தாக்கிய போலீசார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தாக்கிய போலீஸ்காரர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜெயகுமார் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயக்குமார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும்’ என்றார். பேட்டியின்போது பாதிக்கப்பட்ட ஜெயக்குமார், மனைவி மேனகா, மகள்கள் வைஷ்ணவி, கோசிகா, மகன் தக்‌ஷன் ஆகியோர் வந்திருந்தனர்.

Tags : policemen , The worker, the police
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்