×

இந்திய விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்... உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: இந்திய விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட  மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களை போலவே  மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்த பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையை கட்டவிழ்த்து விடவும் தீவிரமாக முயன்று வருகிறது.

இதையடுத்து சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு, இந்திய வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.மேலும் ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரிலும், அதைச்சுற்றிலும் உள்ள விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளனர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 8 முதல் 10 பயங்கரவாதிகள் வந்து தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக 2-வது மிகப்பெரிய எச்சரிக்கையான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட், அமிர்தசரஸ் மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று அவந்திப்பூர், ஜம்மு, ஹிண்டன், அவந்திப்பூர் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களும் உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரவு, பகல் பாராது 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

Tags : terrorists ,Pakistani ,suicide attack ,Indian Air Force , Indian Air Force, Pakistan Terrorist, Attack
× RELATED 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை