×

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்,.. ஒரே நாளில் 5 போலி டாக்டர்கள் கைது: சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்: தினகரன் செய்தி எதிரொலியால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில்  5  போலி டாக்டர்கள் பிடிபட்டனர். இந்த வேட்டை தொடர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், மேல்நிலை, உயர்நிலைக்கல்வி மட்டுமே படித்து, ‘டிப்ளமோ இன் பார்மஸி’ முடித்து மருந்துக்கடைகளில் பணிபுரிந்தோர், தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாக பணிபுரிந்த பலர், தனியாக கிளினிக் வைத்து டாக்டர் தொழில் செய்ய துவங்கினர்.எந்தெந்த நோய்க்கு, என்னென்ன மருந்து வழங்கலாம் என்பதை, தங்களின் தொழில் அனுபவத்தால் கற்று, தனியாக கிளினிக் நடத்தும் இவர்கள், ‘’போலி டாக்டர்’’’’ என, இந்திய மருத்துவு கவுன்சில் கூறுகிறது. அக்கவுன்சில் பரிந்துரைப்படி, போலீசாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.

நகர்ப்புறங்களில், அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடங்கள், மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் மட்டுமே இவர்கள் கிளினிக் நடத்துகின்றனர். காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்களுக்கு, வீரியமிக்க மருந்துகளை வழங்கி, அவர்களை குணப்படுத்துவதால், மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகி விடுகின்றனர். இத்தகைய டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, திருவள்ளூர் மாவட்ட அளவில், கலெக்டரை தலைவராக, சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குனரை செயலாளராக கொண்டு, குடும்ப நல துணை இயக்குனர், எஸ்.பி., உட்பட ஒன்பது பேரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு செயல்பாடு சுணக்கம் அடைந்துள்ளது. இதனால், சில இடங்களில் மீண்டும் போலி டாக்டர்கள் தலைதுாக்க துவங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து ‘’தினகரன்’’ நாளிதழில் கடந்த 30ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, இக்குழு விழித்துக்கொண்டது. உடனடியாக கிராமப்புறங்களில் திடீர் வேட்டையில் நேற்று காலை முதல் ஈடுபட்டனர். இதில், பெரியபாளையம் பஜாரில் உள்ள கிளினிக்கில் ஆய்வு செய்தபோது, அங்கு அலோபதி சிகிச்சை நடத்திவந்த போலி பெண் டாக்டர் திலகவதி(43) என்பவரை அதிகாரிகள் குழுவினர் பிடித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல், எளாவூர் ஜிஎன்டி சாலையில் கிளினி நடத்திவந்த போலி டாக்டர்கள் ராஜேந்திரன்(48) மற்றும் நீலகண்டன்(35) ஆகியோரை பிடித்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், மீஞ்சூர் பஜாரில் கிளினிக் நடத்தி வந்த  ஜெவதாரக் ராமராவ்(50)  என்பவரை பிடித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இவர்கள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் தயாளன், அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தார். தொடர்ந்து, வெங்கல் - பெரியபாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்த ராமச்சந்திரன்(65) என்பவர், அதிகாரிகள் குழுவினர் வருவதையறிந்து  தப்பினார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது. இவ்வாறு ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் பிடிபட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போலி டாக்டர்கள் வேட்டை தொடர்ந்து நடைபெற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டி கிடக்கும் கிளினிக்குகளுக்கு சீல்?
மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக புகார் உள்ளது. பலர் லைசென்ஸ் இல்லாமல் மருந்துக்கடைகள் வைத்துள்ளனர். இவர்கள் கிராம மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலிக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதால் பலருக்கு நோய் தொற்றுதல் அதிகமாகியுள்ளது. சிலர் டாக்டர்களை போல ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். இவ்வாறான போலி டாக்டர்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினர் கிராமங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் 5 போலி டாக்டர்களை பிடிபட்டுள்ளனர்.

இதனால், கிராமங்களில் கிளினிக் நடத்திவந்த போலி டாக்டர்கள் பலர், தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இம்மாவட்டத்தில் மட்டும் கடந்த 2016ம் ஆண்டு 36 போலி டாக்டர்கள், 2017ல் 12 போலி டாக்டர்கள்பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘அனைத்து கிராமங்களிலும் அதிகாரிகள் சென்று, தற்போது பூட்டிக் கிடக்கும் கிளினிக்குகளை ‘சீல்’ வைத்து, பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் விசாரணை செய்து, போலி டாக்டராக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : doctors ,district ,Tiruvallur , Thiruvallur district, 5 fake doctors, arrests, health department officials
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...