×

150வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்ேகாட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், வாரிய தலைவர்கள், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு அருகே சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் மிதிவண்டி பேரணியை காந்தி சிலை அருகில் துவக்கி வைத்தார். அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் சங்கர் மற்றும் கூடுதல் இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் பற்றி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7 மணிக்கு காந்தியடிகள் பற்றிய திரைப்படம் திரையிடப்பட்டது.


Tags : occasion ,birthday ,governor ,garland ,chief minister ,Marina beach ,Gandhi , 150th Birthday, Marina Beach, Gandhi Statue, Governor, CM
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...