×

திருவொற்றியூர் பகுதிகளில் கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்:  திருவொற்றியூர், மணலி புதுநகர், மாதவரம் போன்ற பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட சரக்கு பெட்டகம் உள்ளது. சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய பொருட்கள் கன்டெய்னர் பெட்டியில் அடைக்கப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சோதனைக்குப் பின் அவை டிைரலர் லாரி மூலம் சென்னை துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இவ்வாறு செல்லக்கூடிய டிரைலர் லாரிகள் பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர்  விரைவுச்சாலை வழியாக செல்கிறது.  இந்த நிலையில் கன்டெய்னர் லாரி அதிக அளவில் அடிக்கடி இந்த சாலைகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இதுபோல் கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து அதிக அளவில் சென்றதால் மணலி சந்திப்பிலிருந்து,  திருவொற்றியூர் சுங்கச்சாவடி வரை சுமார்  எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட கியூ வரிசையில் நின்றன.

இதனால் மாநகர பேருந்து, கார், மோட்டார் பைக் போன்ற மற்ற வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் சுமார் 2 மணி நேரம் போராடி அந்த போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.   இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் அருகே கால்வாய் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார்கில் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் மணலி சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும்,  காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் டிரைலர் லாரிகள் அதிகளவு செல்வதால் இதுபோல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே அலுவலக நேரங்களில் கன்டெய்னர் லாரிகள் செல்வதை போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்தவேண்டும். நான்கு வழி பாதைகளில் ஒரு வழிப் பாதையில் மட்டும்  கன்டெய்னர் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் இந்த பகுதிகளில் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.   எனவே இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு விபத்துகளும் தவிர்க்கப்படும்” என்றனர்.

செயல்படாத கேமராக்கள்
வழிப்பறி கொள்ளையர்கள், திருட்டு வாகனம் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க  எண்ணூர் விரைவு சாலையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஆனால் அதில் பல கேமராக்கள் இயங்குவதில்லை. எனவே சாலையோரங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கண்காணித்து பழுதான கேமராக்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : TH ,areas , Thiruvottiyur, Container Lorry, Traffic, Public
× RELATED த.மா.கா., ஓபிஎஸ் அணிக்கு தொகுதிகளை இறுதி...