×

டூவீலர் சர்வீஸ் சென்டர் கழிவுகளை கொரட்டூர் ஏரியில் கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு: மேலாளர், டிரைவர் கைது

அம்பத்தூர்: கொரட்டூர் ஏரியில் இரு சக்கர வாகன சர்வீஸ் சென்டரில் உள்ள கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து கொட்டிய சரக்கு வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுதொடர்பாக சர்வீஸ் சென்டர் மேலாளர், டிரைவர் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.  அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரி, 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனிகளில் இருந்து ரசாயன கழிவுகள் மழைநீர் கால்வாய் மூலம் ஏரியில் கலந்து வந்தது. இதனால், ஏரிநீர் கொஞ்சம், கொஞ்சமாக மாசடைந்தது. இதனால், இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், ஏரியை சுற்றிய வீடுகளில் உள்ள கிணறு, போர்வெல்களில் தண்ணீர் மாசடைந்தது.  இதனையடுத்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கொரட்டூர் ஏரியில் ரசாயன கழிவுகள் கலப்பதற்கு தடைவிதிக்க கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் ஏரியில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 3 மாதங்களாக ஏரியில் பசுமை திட்டுகள் அமைத்தும், மரக்கன்றுகளை நட்டும் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு சரக்கு வாகனத்தில் கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டியுள்ளனர். இதுகுறித்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, இயக்கத்தின் செயலாளர் சேகரன் தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரக்கு வாகனத்தை சிறைபிடித்தனர். அப்போது, வாகனத்தை விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடினார். மேலும், அவர்கள் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  இதில், ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச்.சாலையில் தனியார் இரு சக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த நிறுவனத்தில் இரு சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்யும்போது சேரும் கிரீஸ் உள்ளிட்ட ரசாயன கழிவுகளை கோணி மூட்டைகளில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து ஏரியில் வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் பொதுமக்களிடம் இருந்து சரக்கு வாகனத்தை மீட்டனர். அதில், 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரசாயன கழிவுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து  சர்வீஸ் சென்டர் மேலாளர் சென்னை, திருமங்கலம் கலெக்டர் நகர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24), சரக்கு வாகனத்தை ஓட்டிய  டிரைவர் திருமங்கலம், டி.வி.நகர், தில்லை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : service center ,manager ,Korattur ,Korattur lake , Two-wheeler service center waste, Korattur lake, captivity, manager, driver arrested
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...