நகை அடகு நிறுவன மேலாளரிடம் துப்பாக்கி முனையில் 20 லட்சம் பறிக்க முயற்சி: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் ,.. தி.நகரில் பரபரப்பு

சென்னை: கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தின் கிளை அலுவலகம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக கிரிஷ் (30) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பணம் ₹20 லட்சத்துடன் நேற்று முன்தினம் இரவு பேருந்து மூலம் பெங்களூரிலிருந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார். பிறகு நிறுவனத்தின் செக்யூரிட்டி சந்திரகுமாருடன் பைக்கில் தங்களது நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை பாரதி நகர் 2வது தெருவில் வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் மேலாளர் கிரிஷ் சென்ற பைக் முன்பு வந்து நின்றது. காரில் இருந்து முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் துப்பாக்கி மற்றும் இரும்பு கம்பிகளுடன் இறங்கி, மேலாளர் கிரிஷ் வைத்திருந்த ₹20 லட்சம் பணம் உள்ள பெட்டியை பறிக்க முயன்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மேலாளர் பணத்துடன் அருகில் உள்ள கடைக்குள் ஓடி புகுந்தார். அப்போதும் விடாமல் அந்த கும்பல், அவரை துரத்தி கொண்டு ஓடினர். இதை பார்த்த அந்த கடையில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி சையத் சுல்தான், தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி “திருடன் திருடன்” என கத்தியபடி சுற்றி வளைக்க முயன்றார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி அவர்கள் வந்த காரில் தப்பி ஓடினர்.

இதையடுத்து, தனியார் அடகு நிறுவன மேலாளர் கிரிஷ் சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சென்னையில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாநகரத்திற்குள் மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் 20 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>