×

திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 3வது நாளில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 3வது நாளில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி கடந்த 30ம் தேதி தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளில் இரவு தங்க பெரிய சேஷ வாகனத்திலும், 2வது நாளான நேற்று முன்தினம் தங்க சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்று காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும், நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்கு உண்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதி உலாவின் போது கேரள செண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் அருள் பாலித்தார்.

நாளை கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான  கருட சேவை நாளை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை மறுநாள்  புரட்டாசி மாதம் 3வது  சனிக்கிழமை என்பதாலும், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று, நாளை, நாளை மறுநாள்  ஆகிய 3 நாட்கள் திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Lord ,Tirupati Temple Promotional Day ,devotees ,Tirupati Temple , Tirupati Temple, Pearl Pandal, Malayappa Swami Bhavani
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்