×

குமரி வனப்பகுதியில் பல கோடி மதிப்பு மரங்கள் வெட்டி கடத்தல்: அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு

குலசேகரம் : குமரி மாவட்ட வன பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் காடுகள். அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளதால் இங்குள்ள காடுகளில் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி, சந்தனம்  உள்ளிட்ட மரங்கள் அதிகம் உள்ளன. பல அரிய மூலிகைகளும் காணப்படுகின்றன.2016 நவம்பரில் வீசிய ஓகி புயலில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வன பகுதி முற்றிலும் நாசமானது. அவற்றை வெட்டி அகற்றும் பணி முழுமையாக நடைபெறவில்லை. குறிப்பாக குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி,  செல்லந்திருத்தி, காயல்கரை பகுதிகள் அடர்ந்த காட்டு பகுதி. மக்கள் நடமாட்டம் இல்லாததால், வனத்துறையினரும் அதிகளவில் செல்வது இல்லை. இந்த பகுதிகளில் ஓகி புயலில் தேக்கு, ஈட்டி போன்ற விலை மதிப்பு மிக்க, நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் முறிந்து கிடந்தன. வனத்துறை இதை கண்டு கொள்ளாததால், கடத்தல் கும்பலின் பார்வை இந்த மரங்கள் மீது விழுந்தது. குமரி  மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வட மாநில கும்பல் இந்த பகுதிக்குள் நுழைந்து முறிந்து விழுந்த மரங்களை மட்டுமில்லாமல் காடுகளில் உள்ள மற்ற மரங்களையும் வேட்டையாட தொடங்கினர். நவீன மர அறுவை இயந்திரம் மூலம்  மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அவற்றை லாரிகளிலும், டெம்போக்களிலும் கடத்தினர். நள்ளிரவில் இவை கடத்தி கொண்டு செல்லப்பட்டன.

இந்த கும்பல் தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கிகளையும் வைத்து இருக்கிறார்கள். இரவு நேரங்களில் வன விலங்குகள் தொல்லையில் இருந்து தப்பும் வகையில் துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு நூற்றுக்கணக்கான மரங்களை  வெட்டி கடத்தி உள்ளனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மிகவும் ரகசியமாக நடந்து வந்த இந்த கடத்தல் பொதுமக்களிடம் கசிய தொடங்கியது. இது குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் பெரிய அளவில் எதுவும் நடவடிக்கை இல்லாததால் வனத்துறை  செயலர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில்ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று பெருஞ்சாணி, செல்லந்திருத்தி போன்ற போன்ற பகுதிகளில் ரகசிய ஆய்வு செய்துள்ளனர். குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர். இந்த ஆய்வில் கடத்தல் நடந்தது 100 சதவீதம் உறுதியாக  தெரிகிறது. எனவே விரைவில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அரசியல் பின்னணி மற்றும் அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடந்திருக்க  வாய்ப்பு இல்லை. எனவே இது தொடர்பாக முழுமையாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kumari forests Kumari Forests , Multi-cropping , trees , Kumari, forests
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது