×

கோவை நகைக்கடையில் பயங்கர தீ விபத்து: லாக்கரில் இருந்த தங்க நகைகள் தப்பின

கோவை: கோவை நகைக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் எரிந்து நாசமானது. தங்கநகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் தப்பின.  கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் இவருடைய மகன் செந்தில்குமார்(35), நகைகளை லாக்கரில்  வைத்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.நள்ளிரவு ஒரு மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இரவுப்பணி காவலாளிகள், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு வீரர்கள் சென்று பல மணி நேரம்  போராடி தீயை அணைத்தனர்.   இருப்பினும்  கடையின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த ஏராளமான வெள்ளி பொருட்கள், உள் அலங்கார அமைப்புகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. கடையின் கடைசி அறையில் உள்ள லாக்கரில் தங்க நகைகள்  வைக்கப்பட்டிருந்ததால் அவை தப்பின. தீயில் எரிந்து சேதமான வெள்ளி பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து  கடைவீதி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Goa ,jewelery shop , Fire breaks , Goa ,jewelery, shop
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...