×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவன் இர்பானின் தந்தை போலி டாக்டர்

* எம்பிபிஎஸ் பாதியில் நிறுத்திவிட்டு 2 இடத்தில் கிளினிக்
* சிபிசிஐடி விசாரணையில் ‘திடுக்’ தகவல் அம்பலம்

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவன் இர்பானின் தந்தை முகமது சபி கைதானார். இவர் போலி டாக்டர் என்பதும், இவரது மகன் முகமது இர்பான் ஒரே நேரத்தில் மொரீசியஸ், தர்மபுரி மருத்துவக்கல்லூரிகளில்  மருத்துவம் படித்து வந்ததும் சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து முகமது சபி சிறையில் அடைக்கப்பட்டார்.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல் ஆகிய 3 பேரும், அவர்களது தந்தைகளும் கைது  செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த மாணவர் இர்பான் நேற்று முன்தினம், சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை வரும் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம்  தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் இவரை, தேனி சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை முகமது சபியிடம் தேனி சிபிசிஐடி போலீசார், கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். நேற்று விடுமுறை நாள் என்பதால்,  விசாரணைக்கு பின் முகமது சபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, தேனி நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் வீட்டில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து முகமது  சபி, கண்டமனூர் விலக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணை குறித்து தேனி சிபிசிஐடி டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ் கூறியதாவது:கைதான மாணவர்கள் உதித்சூர்யா, ராகுல், பிரவீன் மற்றும் அவர்களின் பெற்றோர்,  முகமது சபி மூலம் புரோக்கர்களுக்கு பழக்கமாகி உள்ளனர். முகமது சபி ஆந்திர மாநிலம், பிஜப்பூரில் உள்ள அல்அமீன் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ்  சேர்ந்து 3 ஆண்டுகள் மட்டுமே படித்துள்ளார். அதன் பின்னர் வாணியம்பாடியிலும், திருப்பத்தூரிலும் மருத்துவமனை நடத்திவந்துள்ளார். (இந்த மருத்துவமனைகளில் பதிவு பெற்ற அரசு மருத்துவர் என போர்டு வைத்துள்ளார்). இதனருகே மெடிக்கல் ஸ்டோரும் நடத்தி வருகிறார். கால் டூட்டி டாக்டர்கள் பலர், இவரது மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க வருவது  உண்டு. இவர் தன்னை ஒரு டாக்டர் போன்றே சமுதாயத்தில் வெளிப்படுத்தி வந்துள்ளார்.இவரது முதல் மகன் எம்பிபிஎஸ் முடித்து தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் இர்பான், மொரீசியஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளார். வெளிநாட்டில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் பணி  புரிய தனித்தேர்வு எழுத வேண்டும். இதனால் தர்மபுரி மருத்துவக்கல்லூரியிலும் சேர்ந்துள்ளார். இதற்காக மொரீசியஸ் கல்லூரியில் பொய் தகவலை கூறி, தனது கல்விச்சான்றிதழ்களை வாங்கி வந்து கொடுத்துள்ளார். முகமது சபிக்கு வாணியம்பாடியில் ஒரு வீடு, திருப்பத்தூரில் ஒரு வீடு உள்ளது. திருப்பத்தூரில் உள்ள வீடு அருகே  வசிப்பவர் கோவிந்தராஜ்(57). இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.

இவர்தான் புரோக்கர் வேதாச்சலத்தை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக முகமது சபி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் கைதான கோவிந்தராஜிடம் கேட்டபோது, அவர் ஜெயராமன் என்பவரிடம் வேதாச்சலத்தின்  மொபைல் நம்பரை கொடுத்ததாகவும், ஜெயராமன் மூலம் முகமதுசபிக்கு அந்த நம்பர் கிடைத்திருக்கலாம் என்றும் கூறுகிறார். இதனால் இவரது செல்போனில் யார், யாரிடம் எப்போது பேசினார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.ஜெயராமனும், வேதாச்சலமும் அரசு மருத்துவமனைகளில் பார்மசிஸ்ட் ஆக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மொபைல் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலம்தான் புரோக்கர் முகமது ரஷீத் பணம் வாங்கி, ஆள்  மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்துள்ளனர்.
தற்போது வேதாச்சலம் சென்னையிலும், முகமது ரஷீத் கர்நாடகாவிலும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடித்தால்தான் முழு உண்மையும் வெளிவரும். தற்போது முகமது சபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட புரோக்கர் கோவிந்தராஜ், விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டுமென நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு கூறினார்.

இர்பான் ‘சஸ்பெண்ட்’
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விடுதியில் தங்கி படித்துவந்த மாணவன் இர்பான் மட்டும் ஆஜராகாமல் இருந்தார். அவரை கடந்த 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி  பதிவு தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கல்லூரியில் இருந்து இர்பான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ் கூறுகையில், சிபிசிஐடி போலீசில் இர்பான் கல்வி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம். மேலும், மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இந்த  உத்தரவு குறித்த கடிதம், அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இரண்டு முறைகளில் ஆள் மாறாட்டம் சிபிசிஐடி தென்மண்டல எஸ்பி விஜயகுமார் கூறியதாவது:
இரண்டு முறைகளில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது. ஒன்று ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு இடங்களில் தேர்வு எழுதி உள்ளனர். இதுகுறித்த விவரங்களை வழங்குமாறு நொய்டாவில் உள்ள நேஷனல் டெஸ்டிங்  ஏஜன்ஸியிடம் (நீட் தேர்வு மையம்) தகவல் கேட்டுள்ளோம். மற்றொரு முறையில் இவர்கள் தேர்வு எழுதாமல், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, அந்த மதிப்பெண் மூலம் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் முதலாம் ஆண்டு படித்து  வரும் மாணவர்கள் அனைவரையும், நேரில் அழைத்து அவர்களது சான்றிதழ்களை ஒப்பிட்டு சரி பார்க்குமாறு ஏற்கனவே அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பியிருந்தோம். மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளோம்.  தற்போது பதுங்கியிருக்கும் புரோக்கர்கள் சிக்கிய பின்னர் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : Student Irfan , NEET CHOICE, Student Irfan's, father,fake doctor
× RELATED நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில்...