×

தந்தை இறந்த நிலையில் திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலனை: கூட்டுறவு சங்க பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தந்தை இறந்த நிலையில் குடும்ப சூழ்நிலை கருதி அவரது பணியை திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பென்னாடத்தை சேர்ந்த சித்ரா தேவி. முதுகலை பட்டதாரியான இவரது தந்தை அந்தோணி. கடலூர் மாவட்டம் பென்னாடத்தில் உள்ள மல்லிகைகோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இரவு வாட்ச்மேனாக கடந்த 1986லிருந்து பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2011 நவம்பரில் மரணமடைந்தார். இந்நிலையில், தனது தந்தை பணியாற்றி கூட்டுறவு வங்கியில் தனக்கு ஏதாவது ஒரு பணி வழங்குமாறு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்ராதேவி மனுத்தாக்கல் ெசய்தார். மனுவில், தந்தை இறந்தபிறகு தாய் வருமானம் எதுவும் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக 2003ல் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள். கணவருக்கும் நிலையான வேலை இல்லை. எனவே, எனக்கு என் தந்தை பணியாற்றிய கூட்டுறவு வங்கியில் கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் மனு கொடுத்தேன். எனது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனக்கு கருணை அடிப்படையில் மல்லிகைகோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் சம்மந்தப்பட்ட வங்கியின் தலைவர் ஆகியோருக்கு கடந்த 2016ல் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சித்ரா தேவியின் மனுவை பரிசீலித்த பதிவாளர், பணி வழங்கும் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து, சித்ரா தேவி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா  ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ரமேஷ் கணபதி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:மனுதாரரின் தந்தை இறப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே மனுதாரர் திருமணம் செய்துள்ளார். அவர் திருமணமானவர் என்ற காரணத்திற்காகத்தான் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முடியுமா என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி. மனுதாரர் தகுதியுள்ளவர் என்ற நிலையில் அவர் திருமணமானவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாது. அவரின் குடும்ப நிலையையும் பார்க்க வேண்டும்.எனவே, மனுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரிய மனுவை தகுதி மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து 4 மாதங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : death ,Registrar ,Icord Directive , married daughter, father , Kindness, Co-operative, Registrar
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...