×

மாணவர்கள் காதி ஆடை அணிய வேண்டும்: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

சென்னை: மகாத்மா காந்திக்கு மதிப்பளிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் வாரம் ஒரு முறை காதி ஆடைகள் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் கடந்த 10 நாட்களாக மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, மாநில அரசின்  பள்ளிகளிலும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியான நேற்று நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் அவரது நினைவைப் போற்றும்  வகையில் காந்தியின் சிலைக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை செய்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ சார்பில் புதிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளதாவது: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகள் வாரத்தில் ஒருநாள் காதி ஆடை அணியும் நாள் அனுசரிக்க வேண்டும். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சணல் பைகள்  வினியோகிக்க வேண்டும்.

காதி ஆடை அணிவதில் தன்னார்வம் உள்ளவர்கள் வாரம் ஒரு நாள் காதி அணிந்து வரக் கூறலாம். இது வாரம் ஒருமுறை என்று இல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ அணிந்து வரவும் கூறலாம். அதன் மூலம்  மாணவர்கள் இடையே சுய தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தொழில்  ஆகியவற்றை பலப்படுத்துவதுபோல் ஆகும். அதனால், அந்த வகையிலாவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காதி ஆடை அணிந்து காந்திக்கு மரியாதை செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் சணல் பைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மண்டல அலுவலக ஊழியர்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிபிஎஸ்இ பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : schools ,CBSE , Students , khadi dress, Action order ,r CBSE schools
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...