×

தேசத்தந்தை காந்தியடிகளின் 150வது பிறந்தநாள்,.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ,காங்கிரஸ் தலைவர் சோனியா மரியாதை: பாஜ, காங்கிரஸ் சார்பில் பேரணி

புதுடெல்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் நேற்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினம், ‘சர்வதேச அகிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் காந்தியின் நினைவாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  பேரணி மற்றும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கும் ஆளும் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்பாடு செய்திருந்தன. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், ஹர்திப் சிங் புரி, பாஜ செயல்தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ேடாரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், ‘‘மனிதகுலத்திற்கு மகாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்புக்கு தேசம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அவரது கனவு நனவாக தொடர்ந்து நாம் கடுமையாக உழைக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.  துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு விடுத்துள்ள செய்தியில் `பொதுமக்கள் அன்றாட வாழ்வில் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், `‘தேசப்பிதா காந்தியின் 150வது பிறந்தநாளில் எனது மரியாதையை அவருக்கு செலுத்துகிறேன். அவர் மனித குலத்தின் மீது செலுத்திய அன்பு மற்றும் அகிம்சை மூலம் வெறுப்பு உள்ளிட்டவற்றுக்கு முடிவு கட்டினார்’’ என தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் காந்தியடிகளின் படத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் ஓம்பிர்லா, பாஜ மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்ளாள் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  இதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்த சோனியா காந்தியை பிரதமர் மோடி மற்றும் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோர் வணக்கம் செலுத்தி வரவேற்றனர்.

‘மகாத்மா காந்தியடிகள் சிறந்த ஆசிரியர்’:
தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆசிரியர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி “ஏன் இந்தியா மற்றும் உலகுக்கு காந்தி தேவை” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையில், “மகாத்மா காந்தி சிறந்த ஆசிரியர், வழிகாட்டும் ஒளி.  இந்திய தேசியவாதத்தின் மீதான காந்தியின் பார்வையானது ஒருபோதும் குறுகியதாக இருந்தது இல்லை. மனிதகுல சேவைக்காக அவர் பணியாற்றினார்” என்று கூறியுள்ளார்.

சாஸ்திரிக்கு மரியாதை :
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 115 வது பிறந்ததினமும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  இது தவிர பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில்  டெல்லியில் சங்கல்ப யாத்திரை தொடங்கப்பட்டது. இதில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுவதாக அமித்ஷா தெரிவித்தார்.

Tags : Birthday ,Patriotic Gandhians ,Ramnath ,Modi ,Bharatiya Janata Party ,Congress , Nationalist Congress Party, 150th Birthday, President Ramnath, Prime Minister Modi, Congress President Sonia
× RELATED பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்