×

அந்தமான் தீவில் வாணியம்பாடியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் மரணம்: 21 குண்டுகள் முழங்க அடக்கம்

வாணியம்பாடி: வாணியம்பாடியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் நேற்று முன்தினம் அந்தமானில் மரணமடைந்தார். அவரது சடலத்தை வாணியம்பாடிக்கு கொண்டுவந்து 21 குண்டுகள் முழங்க அதிகாரிகள் அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(44). இவர் அந்தமானில் தலைமை அதிகாரியாக(ஹெட் கான்ஸ்டபுள்) சிஆர்பிஎப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சக அதிகாரிகளுடன் கடலுக்கு குளிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதை செய்யப்பட்டது. 14 வயதான அவரது மகள் ஸ்ரீதன்யா, கண்ணீர் மல்க, தந்தையின் உடலுக்கு மரியாதை செய்தார். இந்நிகழ்வு அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

பணியில் இருக்கும்போது அழுதல் கூடாது என்ற ராணுவ மரபை தாண்டி, அந்நிகழ்வின்போது உயரதிகாரிகள் பலரும் கண்கலங்கியபடி இருந்தனர். பின்னர், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். செந்தில்குமாரின் உடல், அவரது சொந்த ஊரான வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்திற்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. அப்போது, வாணியம்பாடியில் உள்ள அரசியல் பிரமுகர்கள், வட்டாட்சியர் முருகன், காவல்துறையினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வளையாம்பட்டு மயானத்தில் சிஆர்பிஎப் அசிஸ்டன்ட் கமாண்டோ விஜயலட்சுமி தலைமையில் 16 பேர் கொண்ட சிஆர்பிஎப் குழுவின் மூலம் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதியில், அவரது மகள் ஸ்ரீதன்யா மற்றும் அவரது தாயிடம் தேசியக்கொடியை ஒப்படைத்தனர்.

Tags : soldier ,CRPF ,Andaman Island CRPF ,death ,player , CRPF, player, death
× RELATED லடாக் எல்லையில் பிடிபட்ட சீன ராணுவ வீரர் உளவாளி?