×

காட்பாடி அருகே ரூ.4.80 லட்சம் மதிப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க செங்குத்து வடிகட்டி குழிகள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் ஏரியில் நிலத்தடி நீரை பாதுகாக்க ரூ.4.80 லட்சம் மதிப்பில் 3 செங்குத்து வடிகட்டி குழி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளில், 13 ஆயிரத்து 710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு முன்பு அரசர்கள் காலத்தில் 39 ஆயிரத்து 500 ஏரிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, 298 ஏரிகள் தடம் தெரியாமல் போய்விட்டதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நடந்த ஆக்கிரமிப்புகளால் குளம், குட்டை, நீர்வரத்து கால்வாய்கள் என்று தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே, நீர்நிலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது. அதேபோல், நிலத்தடி நீரை சேமிக்க வீடு, அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் கழிவுநீரையும் வடிகட்டி, நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் ஏரியில் செங்குத்து வடிகட்டி குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கழிவுநீர் நேரடியாக நிலத்தடிக்கு செல்லாமல், தூய்மையான குடிநீராக பூமிக்குள் செல்கிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் முதன் முறையாக வண்டறந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் தலா ரூ.1.60 லட்சத்தில் மொத்தம் ரூ.4.80 லட்சம் மதிப்பில் 3 செங்குத்து வடிகட்டி குழிகள் கட்டப்பட்டிருக்கிறது. இதற்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு 6 அடுக்குகளாக ஜல்லி கற்கள், மணல், அடுப்பு கரி, குழாங்கற்கள் ஆகியன நிரப்பப்பட்டுள்ளது. இந்த குழிக்கு நடுவில் சிமெண்ட் உறைகள் இறக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் நேரடியாக பூமிக்குள் செல்லாமல் வடிகட்டப்பட்டு பூமிக்குள் செல்லும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நடுவில் உறைகளை வெளியே எடுத்துவிட்டு அழுக்கான மணல் உள்ளிட்டவை மாற்றப்படும். இந்த செயல்பாடுகளை டெல்லியில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர்.

மேலும் ஆந்திராவில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அந்த மாநிலத்திலும் இதுபோன்ற கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் அடுத்தக்கட்டமாக பேரணாம்பட்டில் இதுபோன்ற கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர். இந்நிலையில், காட்பாடி வண்டறந்தாங்கல் கிராம ஏரியை சுற்றிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. தினமும் புதிய கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் செங்குத்து வடிகட்டி குழிகளை அமைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Katpadi , Groundwater
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி