×

பேனருக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்... அதுவே உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம்; பிரதமருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல் நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேனர் விழுந்ததில் தடுமாறி விபத்தில் சிக்கி சுபஸ்ரீ உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை என்று கமல் தெரிவித்தார். ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து தமிழர்கள் மீளும் முன் பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை அரசு அனுகியுள்ளதை கமல் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பேனர்களை தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். பேனரை பிரதமர் தவிர்த்தால் அதுவே தமிழகத்தில் பெரிய விளம்பரமாக அமையும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அக்டோபர் 11, 12, 13ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் 11ம் ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பேனர்களை வைத்து பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பேனர் வைக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் பிரதமரை வரவேற்க பேனர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று ஆஜராகி, பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், நல்லெண்ண அடிப்படையில் சீன அதிபர் இந்தியா வருகிறார். அவரை வரவேற்க 14 இடங்களில் அக்டோபர் 9 முதல் 13வரை பேனர்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் வழக்கை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல் நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Kamal Haasan , Kamal Haasan urges PM Modi to put an end to banner culture, says ‘it will be garner you greatest publicity’
× RELATED சொல்லிட்டாங்க…