×

புயலால் சேதமான பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம் அச்சத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடைசி பகுதியில் கடற்கரை ஒட்டி அமைந்துள்ள ஒரு பகுதிதான் .இந்த மேலதொண்டியக்காடு கிராமம். அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டு எந்தவொரு அடிப்படை வசதிகளையும்  முறையாக பெறாமல் மிகவும் பின்தங்கிய இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இயற்கை சூழலில் இப்பகுதியில் பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏழை விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், மீனவர்களின் குழந்தைகளான 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து  வருகின்றனர். தரமுடன் இருந்த பழமையான ஓட்டு கட்டிடத்தில் இயங்கிய இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வந்தது.

பள்ளி வளாகத்தில் சத்துணவு மையமும் உள்ளது. கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி தாக்கிய கஜா புயலின் போது இந்த பள்ளியின் ஓட்டு கட்டிடம் சேதமானது. பள்ளி வளாகத்தில் பசுமையாக இருந்த மரங்களும் அடியோடு சாய்ந்தது. இதில்  ஒட்டு கட்டிடத்தின் ஓடுகள் காற்றில் பறந்தது கட்டிடமும் பல பகுதி சேதமாகியது. இதனால் அருகில் உள்ள மற்றொரு பழமையான கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தாலும் இதில் உள்ள வசதிகள் இல்லாததால் இதையும் அவ்வப்போது பயன்படுத்தும் சூழ்நிலையும் உள்ளது.

அதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் வந்து கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கி வருகின்றனர். இது குறித்து பெற்றோர்களும் பள்ளி  நிர்வாகமும் கிராம நிர்வாகமும் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுநாள்வரை எந்தவொரு நடவடிக்கையுமில்லை.

எனவே இனியும் அரசும் கல்விதுறையும் காலதாமதம் ஏற்படுத்தாமல் உடன் இந்த பழமையான பள்ளி கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்து சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்  இதுகுறித்து தொண்டியக்காடு செந்தில், சிவகுரு ஆகியோர் கூறுகையில், கலெக்டர் நேரில் பார்வையிட்டு இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். அதே நேரத்தில் மீண்டும் அலட்சியப்படுதினால் விரைவில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தனர்.



Tags : parents ,collapse ,school building ,storm , Students who fear the collapse of a school building damaged by a storm: Parents urged to take action
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்