×

மாவட்டத்தில் மீண்டும் கன மழை துவக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

ஊட்டி: கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. கடந்த 29ம் தேதி இரவு 10 மணிக்கு  துவங்கிய மழை விடிய விடிய ஊட்டி மற்றும் குந்தா பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு கோத்தகிரி மெட்டுக்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் பலியானார். கேத்தி பாலாடா பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நீன்றது.

விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டள்ளனர். அதேபோல், முத்தோரை பாலாடா பகுதியில் பெய்த மழையால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மீண்டும்  பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி., மூலம் இந்த மண் குவியல்களை உடனுக்குடன் அகற்றியதால் போக்குவரத்து சீரானது.  இந்நிலையில், இந்த மழை தொடர்ந்தால் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்தது.

ஆனால், நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை. மழை குறைந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர். ஆனால், நேற்று பிற்பகல் முதல் மீண்டும் மழை துவங்கியது. ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. மீண்டும் கன மழை பெய்யத்துவங்கியுள்ளதால், பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் பெரிய அளவிலான  நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே தற்போது கன மழை பெய்து வருவதால், பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் நீலகிரி மாவட்ட மக்கள் உள்ளனர்.

Tags : district ,public , Heavy rainfall in the district again: General public
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு