×

குப்பைகளை பிரிக்க கூறி வலியுறுத்தல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ஊட்டியில் பரபரப்பு

ஊட்டி: மூன்று வகையான குப்பைகளை பிரிக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்துவதாக கூறி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் தீட்டுக்கல் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது சில குப்பைகள் அங்கு கொண்டுச் சென்று கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியே  குப்பைகளால் ஆன மலைப் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காந்தல் பகுதியில் குப்பைகளை பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.  அதேபோல், மக்காத குப்பைகளை பிரித்து எடுத்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது.
உன்னத உதகை திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்களே வீடுகளுக்கு சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால், இதை முறையாக பொதுமக்கள் பின்பற்றப்படுவதில்லை. தூய்மை பணியாளர்கள்  வீடுகளுக்கு சென்று குப்பைகள் பெறும் போது, ஒரு சிலர் மட்டுமே இது போன்று குப்பைகளை பிரித்து கொடுக்கின்றனர். பெரும்பாலானவர்கள் குப்பைகளை பிரிப்பதில்லை. இதனால், இந்த குப்பைகளை தொழிலாளர்களே பிரிக்க வேண்டிய  சூழ்நிலை உள்ளது.  தற்போது, காய்கறி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு குப்பைகளை பிரித்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஊழியர்கள் மூன்று வகையான குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகள்  வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

அதாவது, மக்கும் குப்பைகள், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள், காய்கறி கழிவுகள் என மூன்று வகையாக பிரித்துக் கொடுக்க வற்புறுத்தவதாக கூறப்படுகிறது. நாள் தோறும் குப்பைகளை வீடு வீடாக சென்று பெற்று வந்து அதனை மக்கும்,  மக்காத குப்பைகள் என பிரித்துக் கொடுப்பதற்குள் தொழிலாளர்கள் ஒரு வழி ஆகி விடுகின்றனர். மூன்று வகையான குப்பைகளாக பிரிக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தவதை கண்டித்து நேற்று தூய்மை பணியாளர்கள் லாரிகளுடன் ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது.  நகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், உடன்பாடு ஏற்படவே கலைந்து சென்றனர்.

Tags : Ooty ,cleanliness workers , Emphasis on garbage separation Struggle for cleanliness workers: The stir in Ooty
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்