×

திண்டுக்கல்- பழநி வழித்தடத்தில் ‘தனியாரை’ தனியாக கவனிக்கும் போக்குவரத்து அதிகாரிகள்?: அரசு பஸ்களில் வருவாய் இழப்பு காலதாமதத்தினால் பயணிகளும் அவதி

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல்- பழநி வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு வழிவிட்டு செல்லுமாறு அரசு பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் காலதாமதத்தினால் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் இருந்து திண்டுக்கல்- பழநி இடையே 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் 30க்கும் மேற்பட்டவை சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு ஆதரவாக அரசு பஸ்களை வேண்டுமென்றே முன்னும், பின்னும் காலதாமதம் செய்து ஓட்டி செல்லுமாறு போக்குவரத்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

அதாவது திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 40 நிமிடங்களும், ஒட்டன்சத்திரத்திலிருந்து பழநிக்கு 40 நிமிடங்களும் பயண நேரமாகும். மொத்தத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை 1.30 மணி நேரம் பயண நேரமாகும். நேற்று முன்தினம் மாலை திண்டுக்கல்லில் இருந்து பழநி சென்ற ஒரு அரசு பஸ் ஒட்டன்சத்திரத்திற்கு செல்ல சுமார் 1 மணிநேரமும், பழநிக்கு 2.20 மணி நேரமும் சென்றதாக கூறப்படுகிறது. இந்த காலதாமதம் குறித்து பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் கேட்டு தகராறு செய்தனர். அதற்கு பதிலளித்த டிரைவர், கண்டக்டர் ‘நாங்கள் என்ன செய்வது, தனியார் பஸ்சிற்கு முன்னும், பின்னுமக வழிவிட்டு செல்லுமாறு வாய்மொழி உத்தரவு உள்ளது. மேலும் அரசு பஸ்களில் உள்ள இன்ஜினில் மெதுவாக செல்லும் வகையில் அட்ஜெஸ்ட் செய்து வைத்துள்ளார்கள்.

எங்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை கேட்பதா அல்லது நீங்கள் சொல்வதை கேட்பதா அனுதினமும் இதே பிரச்னையாக இருக்கிறது என புலம்பியுள்ளனர். இதை கேட்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அரசு பஸ்களில் ஏற்படும் காலதாமதத்தினால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே திண்டுக்கல்- பழநி வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,On Pannani Road ,Traffic Officers , Traffic Officers Who Watch The Private Person On The Dindigul-Palani Route
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்