×

போச்சம்பள்ளியில் சாமந்தி பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி பூக்களுக்கு விலை அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.போச்சம்பள்ளி தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கரில் சாமந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் மட்டும் பூக்களின் விலை அதிகரிக்கும். மற்ற நாட்களில் பூக்கள் விலை சரியாமல் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், கடந்த  மாதங்களில் சாமந்தி கிலோ ரூ.10க்கும், செண்டுமல்லி ரூ.5க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை கடுமையாக குறைந்ததால் சாகுபடிக்கு செலவிட்ட தொகையைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால்,  சாகுபடி செய்யப்பட்ட பூக்களை சாலையில் கொட்டி சென்றனர்.

 இந்நிலையில், அடுத்த வாரம் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜைகள் வருவதால் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் அதிகளவில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.  இதுகுறித்து ஜம்புகுட்டபட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளில் பூக்களுக்கு விலை கிடைக்காததால், நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, சரஸ்வதி, ஆயுத பூஜையையொட்டி சாகுபடி  செய்யப்பட்டுள்ள சாமந்தி பூக்களுக்கு உரிய விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த சில மாதங்களாக சாமந்தி பூக்கள் கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது  என்றனர்.

Tags : Pochampally ,Somanthi , Somanthi flower prices at Pochampally The farmers are happy
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...