×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவர் முகமது இர்பான் சஸ்பெண்ட்

தருமபுரி: நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவர் முகமது இர்பான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீண், ராகுல் ஆகிய 3 பேரும், அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை டாக்டர் முகமது சபியை கடந்த 3 நாட்களுக்கு முன்பு  சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். அவர் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இர்பான் மொரீசியஸ் தப்பி சென்று விட்டதாகவும், அவர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இர்பான் நேற்று மதியம் 12 மணியளவில், திடீரென சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி சிவா, அவரை வருகிற 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதன்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே மருத்துவ கல்வி இயக்குனரகம் இர்பானை சஸ்பெண்ட் உத்தரவிட்டனர். இதனையடுத்து கல்லூரி முதல்வர் சீனிவாசராஜு விடுப்பில் சென்ற மாணவர் முகமது இர்பானை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : Dharmapuri Medical College ,Mohammed Irfan ,student , NEET impersonation, NEET exam impersonation, Mohammed Irfan, Dharmapuri Medical College, Suspend
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...