×

அரை ஆடைக்கு மாறிய இடத்தில் மகாத்மா காந்திக்கு புதிய வெண்கல சிலை: ஐகோர்ட் நீதிபதி இன்று திறக்கிறார்

மதுரை: காந்தி அரை ஆடைக்கு மாறியதை நினைவுபடுத்தி அமைக்கப்பட்ட சிலை சேதமடைந்ததால், அந்த இடத்தில் புதிய வெண்கல சிலை இன்று திறக்கப்படுகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தி விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். அப்போது, கடந்த 21.9.1921ல் மதுரைக்கு வந்தார். மதுரையில் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தோர்  வேட்டியுடன் அரை ஆடையில் வியர்வையுடன் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கண்டு வருந்திய மகாத்மா காந்தி, அன்று முதல் தான் வேட்டி, துண்டு என்ற அரை ஆடைக்கு தன்னை மாற்றினார். அதுமுதல் தனது இறுதி  காலம் வரை அரை ஆடையுடன் தான் வலம் வந்தார்.

அந்தளவுக்கு காந்தியின் வழக்கமான வாழ்க்கையை மதுரை புரட்டிப்போட்டது. தான் அரை ஆடைக்கு மாறியதன் காரணம் குறித்து மறுநாள் முனிச்சாலை (தற்போதைய காந்தி பொட்டல்)  பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விளக்க மளித்தார். காந்தி அரை ஆடைக்கு மாறியதை நினைவு கூர்ந்திடும் வகையில் காந்தி பொட்டலில் அவருக்கு கடந்த 18.11.1984ல் சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சிலை  சேதமடைய துவங்கியது. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு ஒரு கைப்பகுதி உடைந்து துண்டானது. சிலையின் பல இடங்களிலும் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டது. இதனால், வரலாற்றை நினைவு கூர்ந்திடும் வகையில் அமைக்கப்பட்ட காந்தியின்  சிலையை மாற்ற வேண்டுமென பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து சிலை பராமரிப்பு குழுவினரும் வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரினர். தற்போது வெண்கல சிலை அமைக்க கலெக்டர் அனுமதியளித்துள்ளார். இதைத்  தொடர்ந்து காந்தியின் முழு உருவ வெண்கல சிலை தயாராகியுள்ளது. இதுகுறித்து பராமரிப்பு குழுவைச் சேர்ந்த வக்கீல் ஆர்.வெங்கடேசன் கூறுகையில், ‘ரூ.8 லட்சம் செலவில் 280 கிலோ எடையுள்ள காந்தியின் வெண்கல சிலை தயார் நிலையில் உள்ளது. காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி  பொட்டலில் மகாத்மா காந்தியின் புதிய வெண்கல சிலை அக்.2 (இன்று) திறக்கப்படுகிறது. ஐகோர்ட் நீதிபதி டி.ராஜா இந்த சிலையை திறந்து வைக்கிறார்’ என்றார்.



Tags : Mahatma Gandhi ,The Judicial Magistrate ,venue , New bronze statue of Mahatma Gandhi in half-cloth
× RELATED தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி...