×

கணவாய்பட்டி வெங்கடரமண சுவாமி கோயிலில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கணவாய்பட்டி வெங்கடரமண சுவாமி கோயிலில் முடி காணிக்கை மற்றும் கோயில் கடைகள் வாடகை உள்ளிட்டவற்றை டெண்டர் விடாமல், அதிகாரிகள் நேரடியாக பணம் வசூலிப்பதால், அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி அருகே கணவாய்பட்டி உள்ளது. இதை கன்னம்பள்ளி என்றும் கூறுவர். இங்கு பிரசித்தி பெற்ற வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கணவாய்பட்டி, குந்தாரப்பள்ளி, பச்சிகானப்பள்ளி, வரட்டனப்பள்ளி, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, ஜோடுகொத்தூர், சூளகிரி, ராயக்கோட்டை, தொகரப்பள்ளி, சூலாமலை, பனமுட்லு, ஐகுந்தம்புதூர், பாலேகுளி, மலையாண்டஅள்ளி, பெரியமுத்தூர், அவதானப்பட்டி, பாப்பாரப்பட்டி, பெத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 160 கிராம மக்களுக்கு குலதெய்வமாக உள்ளது.

இந்த கோயில் கடந்த 2006ம் ஆண்டு முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றிஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்லும் இந்த கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு, அருகில் உள்ள குளத்தில் குளித்து செல்கின்றனர். ஆனால், இந்த குளம் சிறியதாகவும், பெண்கள் உடை மாற்றுவதற்கோ, குளிப்பதற்கோ தனி இடம் மற்றும் கழிவறை வசதி இல்லாததால், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இக்கோயிலுக்கு உண்டியல் வருமானம் மட்டுமின்றி, கோயில் அருகே வைக்கப்படும் தற்காலிக கடைகள், சமுதாய கூடம், பிரசாத பொருட்கள் விற்பனை, மொட்டை அடிப்பதற்கு டெண்டர் விடுவது போன்றவை மூலம் வருடத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் வருமானம் வருகிறது. நடப்பாண்டு கோயில் அருகே கடை வைக்கவும், மொட்டை அடிக்கவும் அறநிலைத்துறை சார்பில் ₹16 லட்சத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகைக்கு டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அறநிலைத்துறை அதிகாரிகளே முன்னின்று கடை மற்றும் மொட்டை அடிப்பதற்கு பணம் வசூலித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.  

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கோயிலுக்கு வந்து செல்ல சாலை வசதி இல்லாததால், கோயிலுக்கு 1 கி.மீ முன்பாகவே மங்கம்மாபுரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள் கோயிலுக்கு நடந்தே வருகிறோம். எனவே, சாலையை விரிவுப்படுத்தி, கோயில் வரை அனைத்து வாகனங்களும் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அதிகாரிகளால் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Government ,loss ,Ganavai Patti Venkataramana Swamy Temple ,Ganavayapatti Venkataramana Swamy Temple , Officers causing loss of revenue to the Government at the Ganavayapatti Venkataramana Swamy Temple: Emphasize action
× RELATED முடி உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்!