×

நெசவாளர் நிலை உயர கதர் ஆடைகளை அணிவோம்: தமிழக முதல்வர் அறிக்கை

சென்னை: நெசவாளர்களின் நிலை உயர நாம் அனைவரும் கதர் ஆடை அணிவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காந்த ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் ரகங்களை தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு  முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மக்களின் மனதை கவரும் வண்ணம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப்  பொருட்களும் தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் ஆண்டு முழுவதும்  அனைத்து கதர் ரகங்களும், 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுவருகிறது.

கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், ஏழை, எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள்  அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, அவர்கள் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கதரின் பயன்பாடு சுதேசியின் அடித்தளமாகும் என்ற காந்தியடிகளின் வரிகளை நினைவில் கொண்டு, காந்தி ஜெயந்தி நன்னாளில்,  கதராடைகளை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags : Weavers ,Tamilnadu CM , Weave ,elevation, ,wear khadi, dresses
× RELATED சின்னாளபட்டியில் விஸ்வரூபம்...