×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 10,940 பேருந்துகள் இயக்கம்: ஆயுதபூஜைக்கு 6,145 பஸ்களுக்கு திட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,940 பேருந்துகள் இயக்குவதற்கும், ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு 6,145 பேருந்துகள் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று  தலைமைச் செயலகத்தில் நடந்தது.  அப்போது, இந்த ஆண்டும் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும்  மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 24-26 என மூன்று நாட்களும் சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும். பிற  ஊர்களிலிருந்து இந்த மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.மேலும், திருப்பூர், கோவையிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1165 மற்றும் 920 பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர்,  திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஆயுதபூஜை பண்டிகைக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4-6ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து 6,145 பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும்,  கோயம்புத்தூரிலிருந்து  பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களுரிலிருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.ஆயுதபூஜை முடிந்த பின்பு 8,9ம் தேதி வரை, பிற ஊர்களிலிருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து கோயம்புத்தூருக்கு 490 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து பெங்களுருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இதேபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பஸ்கள் ஆயுதபூஜைக்கு இயக்கப்படும் இடங்களில் இருந்தே இயக்கப்படும். கூடுதலாக தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம்,  தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளை இயக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம்  மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.    

தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 27-30ம் தேதி வரை 4627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளிப் பண்டிகை முடிந்து ஏணைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும். தீபாவளிக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் முறையே 570 மற்றும் 925 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை  பின்பு  சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய  இடங்களிலிருந்து பெங்களூருக்கு 221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:  சென்னையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்  வழித்தடங்களில் இயக்கப்படுகின்ற அனைத்து பேருந்துகளுக்கும் கால நேரம் நிர்ணயிக்கப்பட்டு  இயக்கப்பட்டு வருகிறது.  

சென்னையில் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படுகின்ற மின்சாரப் பேருந்துகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் ஃபேம்இந்தியா திட்டத்தின்கீழ், சென்னை, கோவை, மதுரை, வேலூர்,  திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 825 மின்சாரப் பேருந்துகளை இயக்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் மானியமாக மத்திய அரசு வழங்கும்.  மேலும், அண்மையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடனான ஒப்பந்தத்தில் முதற்கட்டமாக, 500 மின்சாரப் பேருந்துகளும், பிஎஸ்-4 தரத்திலான  2,213 புதிய  பேருந்துகளும் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பஸ் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஒரு சில இடங்களில் தாக்கப்படுவது என் கவனத்திற்கு வந்துள்ளது.  தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

எந்த இடத்துக்கு எங்கிருந்து பஸ் புறப்படும்
ஆந்திரா மார்க்கம்: மாதவரம் புதிய பேருந்து  நிலையத்திலிருந்து, ஆந்திரா மார்க்கம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். புதுச்சேரி,கடலூர் மார்க்கம்: கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து, இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர்  மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் செல்லும். தாம்பரம் ரயில் நிலையம்: தாம்பரம் ரயில் நிலையப்  பேருந்து நிறுத்தத்திலிருந்து, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை  செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி,  மார்க்கமாக செல்லும் பேருந்துகள்  திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி,  வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள்
பூந்தமல்லி  பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர்,  காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி  வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பஸ் முனையம்
கோயம்பேட்டிலிருந்து மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,   தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி,  புதுக்கோட்டை,  திண்டுக்கல்,  விருதுநகர்,  திருப்பூர், ஈரோடு,  ஊட்டி,  இராமநாதபுரம், சேலம்,  கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு பஸ்கள்  இயக்கப்படும்.

முன்பதிவு மையங்கள் எங்கே
முன்பதிவு சிறப்பு மையங்கள் 23- 26 வரை  செயல்படும். இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம்-26;  தாம்பரம்  சானிடோரியம்- 2;    பூவிருந்தவல்லி-1; மாதவரம் புதிய பேருந்து நிலையம் 1 என மொத்தம்30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில், தாம்பரம், பூவிருந்தவல்லி,  மாதாவரம் ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு முன்பதிவு மையங்களில் நாளை  (3.10.2019) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இணையதளம் மூலம் முன்பதிவு
பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள,  நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in  உடன் www.redbus.in, www.paytm.com; www.busindia.com போன்ற இணையதளங்கள்  மூலமாகவும் முன்பதிவு  செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.   கோயம்பேட்டில் உள்ள முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Tags : State Transport University ,Diwali ,festival ,occasion ,Arun Pooja ,Armed Forces , occasion , Diwali, 10,940 buses ,Transport University,Armed Forces
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...