×

கிருஷ்ணா நீர் வீணாவதை தடுக்க கண்டலேறில் இருந்து பூண்டி வரை பைப் லைன் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர் வீணாவதை தடுப்பதற்காக கண்டலேறிலிருந்து பூண்டி வரை  பைப் லைன் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி கூறினார்.சென்னை, கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:    கொடுங்கையூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்படுகின்றது. அதேபோல, கோயம்பேடு பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. அங்கு சுமார் ரூ.486 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம், இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிவு பெற்று, பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். அதேபோல,  நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் தலா 10 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக்கும் இரண்டு நிலையங்கள் நிறுவப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலமாக மொத்தம் 110 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு சுத்திகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பணி நிறைவு பெற்றவுடன் 400 எம்எல்டி பேரூரில் உருவாக்குவதற்கு அரசால் உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்மூலம் சுமார் 876 எம்எல்டி நீர் சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையை போக்குவதற்கு வழங்கப்படும். கண்டலேறிலிருந்து திறக்கப்படுகின்ற நீர் பூண்டி வந்தடைகிறது. வருகின்ற வழியில்  அதிகளவில் நீர் வீணாவதை தடுப்பதற்காக கண்டலேறிலிருந்து பூண்டி வரை பைப் லைன் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆந்திர முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு, பேசி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு  முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அது நிறைவேறினால் கண்டலேறிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் முழுவதும் பூண்டி ஏரிக்கு வந்தடையும். சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்னை தீர்ப்பதற்கு வழிவகை ஏற்படும்.

கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் என்பது தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக இணைத்துத்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசால் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இந்த திட்டம் நிறைவேறுகின்றபோது, நம்முடைய பாசனப் பரப்பு ஓரளவு விரிவடையும். பிரதமரிடம் நான் வைத்த கோரிக்கைகள் அனைத்து பத்திரிகைகளிலும் தெளிவாக வந்துள்ளது. எங்களுடைய எண்ணங்களெல்லாம், தமிழகத்தில் பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து மக்களுக்கு வழங்கப்பட  வேண்டும் என்ற அடிப்படையில், நீர் மேலாண்மைத் திட்டம் மூலமாக தொடர்ந்து செயலாற்றி எங்களுடைய அரசு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. அதேபோல், அண்டை மாநிலங்களிலிருந்து, கோதாவரி - காவேரி போன்ற திட்டங்களின் மூலமாக தண்ணீரை, விவசாயிகள்  மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஈடேறுகின்ற விதத்தில், அரசு  செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கழிவுநீரில் 20 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும்
சென்னையில் உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொடுங்கையூரில் ரூ. 348  கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 45 மில்லியன்  லிட்டர் சுத்திகரிப்பு திறன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ேநற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : மழைநீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நிலைகளின் கொள்ளவை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யவும், கழிவுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து  மறுசுழற்சி முறையில்  உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்தவும் “நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” என்ற தீவிர மக்கள் இயக்கத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது.

2004ம் ஆண்டு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மீஞ்சூரில்  அமைக்கப்பட்டது. 2வது நிலையமாக, நெம்மேலியில், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட  கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது நெம்மேலியில் இயங்கி வரும் நிலையத்திற்கு அருகாமையில், மற்றொரு கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு,  பணிகள் நடைபெற்ற வருகின்றன  கழிவுநீர் மறு சுழற்சி மூலமாக தொழிற்சாலைகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 36 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும் முறை 1993ம் ஆண்டே செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.  சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20  சதவீதம் அளவிற்கு மறு சுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Edappadi ,Kandalera ,Pundi ,Krishna ,CM ,Kandy ,Poondi , prevent Krishna, wasting water, Kandy , Poondi
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்