×

சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று பிரதமர் மோடி வருகை: திறந்தவெளி கழிப்பிடமில்லா நாடாக அறிவிக்கிறார்

அகமதாபாத்:  தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று வருகை புரிகிறார். அப்போது இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடமில்லா நாடாக அறிவிக்கிறார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி வருகை புரிகிறார். இது குறித்து மாநில பாஜ தலைவர் ஜிது வகானி கூறுகையில், “ மகாத்மாவின் பிறந்த நாளையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மாலை 6 மணிக்கு அகமதாபாத்  விமான நிலையத்துக்கு வருகிறார்.  பின்னர் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்லும் அவர், மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதில் 20 ஆயிரம்  கிராமங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடமில்லா நாடாக பிரதமர் அறிவிக்கிறார். இதில் கலந்து கொள்வதற்கு காந்திய அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பத்ம  விருது பெற்றவர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கிராம அளவிலான துப்புரவு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்வதற்கு முன்பாக மாநில அளவிலான நவராத்திரி விழாவிலும் மோடி கலந்து  கொள்கிறார்,” என்றார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தண்டி கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. சுமார் 1,500 மாணவர்கள் இதில் பங்கேற்று தூய்மை பணியை மேற்கொள்கின்றனர். முதல்வர் விஜய் ரூபானி மகாத்மா காந்தி பிறந்த  இடமான போர்பந்தரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.


Tags : Modi ,Sabarmati Ashram , Sabarmati Ashram, PM Modi , visit today
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...