×

மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு மனுவில் எஸ்சி, எஸ்டி சட்ட உத்தரவை திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம்: வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கலாம்

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதுகுறித்து ஏற்கனவே வழங்கியிருந்த தனது முந்தைய உத்தரவை திரும்ப பெறுவதாக நேற்று வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு  தெரிவித்துள்ளது.
எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனது உத்தரவில், “பாதிக்கப்பட்டவர்கள்  எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும், புகார் குறித்து தீவிர விசாரணைக்கு பின்னரே அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கடந்த  ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த தீர்ப்பு என்பது வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில் உள்ளது எனக்கூறி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில்  திருத்தம் செய்து அதனை அவசரமாக நிறைவேற்றியது. அதன்படி, வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது என குறிப்பிடப்பட்டது.

இதில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை  தொடர்ந்து விசாரித்து வந்த நீதிமன்றம் வாதங்கள் அனைத்தையும் நிறைவு செய்து தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு மேற்கண்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ‘‘எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. மேலும் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே கைது செய்யலாம் என சட்டத்தில் இடம் உள்ளது என்பதால் அதுபோன்று நடவடிக்கை எடுக்க எந்த தடையும் கிடையாது. இருப்பினும் அவர்களுக்கு ஜாமீன்  வழங்குவது குறித்து விசாரணை அதிகாரிகளோ அல்லது நீதிமன்றமோ தங்களது முடிவை மேற்கொள்ளலாம்’’ என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.

Tags : SD ,SC ,Central Government ,Supreme Court: Arrest ,SD Law Order Withdrawal Supreme Court , petition , Central Government, SC, SD Law ,Order
× RELATED எஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்