×

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் 125 வேட்பாளர்களை அறிவித்தது பாஜ: சிவசேனாவும் 70 பேர் பட்டியலை வெளியிட்டது

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 125 வேட்பாளர்களின் பெயர்களை பாஜ நேற்று அறிவித்தது.  288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்படும். இந்த நிலையில், பாஜ 125 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில பாஜ தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்,  கோத்ருட் தொகுதியில் போட்டியிடுவார். கேப்டன் தமிழ்செல்வம் மீண்டும் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங், ெடல்லியில் இந்த வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கட்சியின் 12 எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். சிவசேனா  மற்றும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜ இந்த தேர்தலை சந்திக்கும் என்று அவர் கூறினார்.
பாஜ.வும் சிவசேனாவும் நேற்று முன்தினம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த மெகா கூட்டணியில் பாஜ, சிவசேனா தவிர, இந்திய  குடியரசு கட்சி (அதாவலே), ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷ், சிவ் சங்க்ராம் சங்கட்டணா மற்றும் ரயாத் கிரந்தி சேனா ஆகிய சிறிய கட்சிகளும் உள்ளன.

மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் சிவசேனா 124 இடங்களிலும் பாஜ 164 இடங்களிலும் போட்டியிட உள்ளன. பாஜ தனது ஒதுக்கீட்டில் இருந்து சிறிய கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுக்கும். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும் கட்சியின் இளைஞரணித் தலைவருமான ஆதித்யா தாக்கரே மும்பை, ஒர்லி தொகுதியில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்  தடவையாக தேர்தலை சந்திக்கும் நபர் இவர்தான். கடந்த 2014ல் பாஜ.வும் சிவசேனாவும் தனித்து போட்டியிட்டன. அதில் பாஜ 122 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக வந்தது. சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கிடையே பாஜ.வின் கூட்டணி கட்சியான சிவசேனா, தான் போட்டியிடும் 124 தொகுதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 70 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஒர்லியில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே  மகன் ஆதித்யாதாக்கரே போட்டியிடுகிறார்.

Tags : Maharashtra Assembly Election ,Bharatiya Janata Party ,Maharashtra Legislative Assembly Election BJP , Maharashtra ,Legislative ,Assembly Election, BJP
× RELATED டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக ஆதேஷ் குப்தா நியமனம்