×

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி தொடரும்: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி தொடரும்

பெங்களூரு: ‘‘விக்ரம் லேண்டர் உடனான தொடர்பை மீட்கும் முயற்சியை கைவிட மாட்டோம். மீண்டும் அதற்கான முயற்சிகள் தொடரும்,’’ என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பி வைத்தது. அதில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவியை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த மாதம் 7ம் தேதி  மேற்கொள்ளப்பட்டது. 2.1 கி.மீ. தூரத்தில் நிலவின் தரைப்பகுதியை லேண்டர் நெருங்கிய நிலையில், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.மிக வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கருவி, நிலவில் மோதி சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், லேண்டருடனான தொடர்பை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.லேண்டர் மற்றும் அதனுள் உள்ள ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. லேண்டர், சோலார் மூலம் செயல்படும் கருவி என்பதால் அதன் தொடர்பை மீட்க, நிலவில் சூரியனின் ஒளிபடும் பகல் பொழுதில் மட்டுமே முயற்சிக்க முடியும்.  நிலவில் ஒருநாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். தற்போது, 3 வாரங்கள் கடந்து விட்ட நிலையில், நிலவில் இரவாகி உள்ளது. அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தற்போது நிலவில் இரவுப்பொழுது என்பதால், விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீட்பதற்கான சாத்தியமில்லை. மீண்டும் பகல் பொழுது தொடங்கியதும் எங்கள் முயற்சியை  தொடருவோம்,’’ என்றார்.மற்றொரு மூத்த விஞ்ஞானி கூறுகையில், ‘‘நீண்ட நாள் ஆகிவிட்டதால் இனியும் தொடர்பை மீட்பது என்பது கடினமான காரியம். ஆனால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. தற்போது, நிலவில் கடும் குளிரால்  மட்டுமின்றி, அதிவேகமாக லேண்டர் தரையிறங்கியதால் அதிர்வில் அதனுள் உள்ள கருவிகள் சேதமடைந்திருக்கக் கூடும். தகவல் தொடர்பு ஆன்டெனா எந்த திசையில் திருப்பி இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்கள்,  மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் சிக்கலாக இருக்கும்,’ என்றார்.அதே சமயம், நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது என்று சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்பு துண்டிப்பு ஏன்?; ஒரு மாதத்தில் அறிக்கை
இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘‘லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய, தேசிய அளவிலான குழுவை இஸ்ரோ அமைத்துள்ளது. அதில் கல்வியாளர்கள், நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு  மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள்  அறிக்கை வெளியிடப்படும்,’’ என்றார்.

Tags : Vikram Lander , attempt, Vikram Lander,attempt,continue
× RELATED சென்னை மாநகராட்சிப் பள்ளியில்...