×

ஏற்கனவே அரசு வழங்கிய இடங்களுக்கு வேறு பெயர்களில் மீண்டும் பட்டா கண்டித்து தீக்குளிக்க முயற்சி : நாட்றம்பள்ளி அருகே பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட 16 பேரின் இடங்களுக்கு மீண்டும் வேறு நபர்கள் பெயரில் பட்டா வழங்கிய தாசில்தாரை கண்டித்து பொதுமக்கள் நேற்று தீக்குளிக்க முயற்சி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவில் கீழ்பந்தாரப்பள்ளி ஊராட்சியில், ஒரு பிரிவை சேர்ந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடந்த ஜனவரி மாதம் 16 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதே இடத்தை பிப்ரவரி மாதம் ேவறு 16 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் பட்டா பெற்ற 3 பேர், அந்த இடத்தில் வீடு கட்டியுள்ளனர். இதையறிந்து ஜனவரி மாதம் பட்டா பெற்ற சிலர், அங்கு வந்து வீடு கட்டுவதை தடுத்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது, தங்களுக்கு தான் பட்டா வழங்கியுள்ளனர் என தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் குமரேசனிடம் முறையிட்டனர். அப்போது அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கிடையில் அந்த இடத்தில் 3 பேர் வீடு கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 16 குடும்பத்தினர் நேற்று நாட்றம்பள்ளி- திருப்பத்தூர் சாலை கே.பந்தாரப்பள்ளி பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களையும் சிறைபிடித்தனர்.

தகவலறிந்த தனி தாசில்தார் குமரேசன், நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர். அப்போது அங்கு மறியலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி மணி(45) என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள் தனி தாசில்தார் குமரேசனை பார்த்து, எங்களுக்கு பட்டா வழங்கிவிட்டு அதே மனையை மறு மாதம் வேறு நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பட்டா போட்டு கொடுத்துள்ளீர்கள்’ என  குற்றம் சாட்டினர். அப்போது அங்கு வந்த நாட்றம்பள்ளி தாசில்தார் உமாரம்யா, இதுகுறித்து குமரேசனிடம் விசாரித்தார். இதற்கு தனி தாசில்தார் குமரேசன், டிஆர்ஓவிடம் பேசி வரும் 18ம் தேதிக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : re-names ,sites ,government ,places , Attempts by the government, re-fire the names ,places already given
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...