×

ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ரேஷன் ஊழியர்களிடம் 500 லஞ்சம் சிறப்பு தாசில்தார், புரோக்கர்கள் சிக்கினர்

ஊட்டி: ஊட்டி தாலுகா சப்ளை அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத 30,845 கைப்பற்றி 3பேர் மீது வழக்குப்பதிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் போது பதிவு செய்யும் இயந்திரம் ஒவ்வொரு மாதமும் தாலுகா சப்ளை அலுவலகத்தில் சோதனை செய்யப்படுகிறது. ஊட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 113 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் உள்ள இயந்திரங்களும் வழக்கம்போல் நேற்று முன்தினம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, 52 ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது கடைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தை எடுத்து வந்திருந்தனர். இது போன்று சோதனைக்கு வரும் விற்பனையாளர்களிடம் மாதம்தோறும் ₹500 லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. மேலும், இதற்கு இருவர் இடைத்தரகர்களாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், வழக்கம் போல், நேற்று முன்தினம் இயந்திரத்தை சோதனை செய்யும் பணி நடந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ₹30 ஆயிரத்து 845 கைப்பற்றினர். மேலும் சிறப்பு தாசில்தார் சாந்தினி, இடைத்தரகர்களாக செயல்பட்ட தியாகு, பாலாஜி ஆகிேயார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத இந்த பணம் எத்தனை பேரிடம் இருந்து பெறப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Ooty ,raid staff raid staff ,bribes specialist ,brokers ,raid staff , Ooty bribery cops, raid staff on bribe
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்