×

டெல்டா மாவட்டத்தில் கூடுதலாக 20 இடங்களில் எண்ணெய் கிணறு : மத்திய அரசிடம் ஓஎன்ஜிசி விண்ணப்பம்

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் கூடுதலாக 20 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க மத்திய அரசிடம் ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை மத்திய அரசு பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து அங்கு தனியார் நிறுவனங்களும், மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏற்கனவே அனுமதி அளித்து உள்ளது.  வேதாந்தா நிறுவனமும், ஓஎன்ஜிசி நிறுவனமும் ஏற்கனவே  முதல் கட்ட பணிகளை துவங்கி விட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என்று கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே 171 இடங்களில் 459 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி பெற்றுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம், இப்போது மேலும் 20 இடங்களில் எண்ணெய் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் 15 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 இடங்கள், காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்கள் ஆகும். இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர்கள் கூறும்போது, ‘மத்திய அரசு தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது டெல்டா விவசாயிகளுக்கு எதிரானது. இப்படியே எண்ணெய் கிணறுகள் வந்து கொண்டிருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிழைப்புதேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக விவசாயிகள் மட்டுமல்ல அரசியல் தலைவர்களும் ஓரணியில் நின்று இதனை தடுக்க முன்வர வேண்டும்’ என்று கூறினர்.

Tags : Oil wells ,places ,district ,government ,locations ,Delta ,ONGC ,Delta District , Oil wells ,additional 20 locations , Delta District
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!