×

கம்யூனிஸ்ட்டுகளுக்கு நன்கொடை வழங்கப்பட்ட விவகாரம் பிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை : மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

சென்னை: ‘கம்யூனிஸ்ட்டுகளுக்கு நன்கொடை  வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரேமலதாவுக்கு பதில் சொல்ல  வேண்டியதில்லை’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று முடிந்திருக்கும் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். நேர்மை நகர், பாலாஜி நகர், அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியிருக்கும் 15 நகர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சீரான-தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அழுத்தமாக வலியுறுத்தியதன் விளைவாக, சுமார் ரூபாய் 15 கோடி செலவில் அந்தப் பணி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேர்மை நகரில் மயான பூமி பணிகள் முழுமையாக முடிவடையும் நிலைக்கு வந்திருக்கிறது.  எல்.சி.ஒன். மார்க்கெட் ரோடு பகுதியில் மாநகராட்சியின் சார்பில் ஒரு சாலை அமைத்துத் தரவேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதற்காக, அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அந்தச் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கித் தரப்பட்டது. ஆனால், அது ரயில்வேயின் இடமாக இருந்தது. அதற்குப் பிறகு ரயில்வே மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளராக இருக்கும் கண்ணையா மூலம் ரயில்வே துறையிடம் இது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்லி, அவர்களிடத்தில் வலியுறுத்தி, அதற்குப் பிறகு அந்தப் பணி துவங்கப்பட்டிருக்கிறது. அதற்காக, எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையாவுக்கு மக்களின் சார்பில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், வில்லிவாக்கம் கொளத்தூர், இவற்றை இணைக்கும் மேம்பால பணியை மாநகராட்சியின் தான் முடிக்க வேண்டும். அதையும் விரைவில் முடித்துத் தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து நிருபர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்விகளை எழுப்பினர். நிருபர்கள்:

‘சென்னைக்கு வந்த பிரதமரின் வருகையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பிரதமரிடம் தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றைக் கொடுத்ததாகச் சொல்கிறார்களே? .மு.க.ஸ்டாலின்: கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆட்சியானது, பிரதமராக இருந்தாலும் அல்லது அமைச்சர்களாக இருந்தாலும், இவர்கள் மனுக்களை மட்டும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நிருபர்கள்: நன்கொடை விவகாரம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: கம்யூனிஸ்ட்டுகளுக்கு நன்கொடை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரேமலதா எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் தந்து விட்டேன்” என்றார்.ஆய்வின் போது சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி, ரங்கநாதன் எம்எல்ஏ, எஸ்ஆர்எம்யு கண்ணையா, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜ்,  மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தலைமை செயலருக்கு விஜிலென்ஸ் ஆணையராக கூடுதல் பொறுப்பா?

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜிலென்ஸ் ஆணையம், லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு சண்முகம் ஐஏஎஸ்க்கு வழங்கப்பட்டிருப்பது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இது ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்கும். இந்த உத்தரவை உடனே ரத்து செய்து, அப்பதவிக்கென தனியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

Tags : Communists ,Premalatha ,interview ,MK Stalin , Matter of donation , Communists,answered by Premalatha
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...