×

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்த வழக்கு தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் : தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் 19 முதல் 21ம் சுற்று வரையிலான மின்னணு வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்பாவு புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தேர்தல் அதிகாரியின் பதில் திருப்தி அளிக்காததால், அப்பாவு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அதிமுக வேட்பாளர் இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பாவு சார்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜராகி வாதிடும்போது, , 19 முதல் 21ம் சுற்று எண்ணிக்கையும் ேதர்தல் விதிகளுக்கு முரணாக நடந்துள்ளது என்று வாதிட்டார். இன்பதுரை சார்பில் மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம் ஆஜராகி, இன்பதுரை வெற்றி சரியான விதிகளின்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள கையேட்டில் 15வது பிரிவில் உள்ள சரத்துக்கள் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வகை செய்யப்பட்டுள்ளது.  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்கான பாரம்-பி விண்ணப்பத்தில் சான்றொப்பம் கொடுத்திருப்பது செல்லத்தக்கது. ராதாபுரம் தொகுதியில் 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு எந்திரங்களின் கண்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்.

இதற்காக 3 சுற்று வாக்கு எந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் வரும் 4ம் தேதி (வியாழக்கிழமை) 11.30 மணிக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை நீதிபதியின் அனுமதியுடன் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஹாலை வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்க கோரிக்கை

அதைத் தொடர்ந்து இன்பதுரையின் சார்பில் மூத்த வக்கீல் டி.வி.ராமானும், நீதிபதியிடம் ‘‘இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். எனவே, இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று  நீதிபதியிடம் கோரினார். அப்போது, நீதிபதி, ‘‘மனு தாக்கல் செய்யுங்கள் விசாரிக்கலாம்’’ என்றார். இதையடுத்து, இன்பதுரை சார்பில் தீர்ப்பை நிறுத்திவைக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு அப்பாவு நாளை பதில் தருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,Election Commission ,constituency ,Radhapuram , Post counting, postal votes, Radhapuram constituency
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...