×

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 7.65 கோடியில் ஏரிகளின் உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்: பொதுப்பணித்துறை பொறியாளர் தகவல்

தாம்பரம்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 7.65 கோடியில் ஏரிகளின் உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணையில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சுற்றியுள்ள பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர் மலை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இந்த ஏரியில் சேகரிக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை நிர்வாகம், ஜப்பான் நாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 9 கோடியே 81 லட்சம் மதிப்பில் இந்த ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளை பொதுப்பணித் துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாம்பரத்தில் பாப்பன் கால்வாய் சீரமைப்பு பணியையும் ஆய்வு மேற்கொண்டார். படப்பை பாசன பிரிவு உதவி பொறியாளர் குஜ்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் தலைமை பொறியாளர் நிருபர்களிடம்  கூறுகையில், ‘‘பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சி, திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் 7 கோடியே 65 லட்சம் மதிப்பில் ஏரிகளின் உபரி நீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏரிகளை பாதுகாக்க தேவையான  மணல் மூட்டைகள், இயந்திரங்கள், பொக்லைன் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளை பாதுகாக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள பொதுப்பணித் துறை தயார் நிலையில் உள்ளது,’’ என்றார்.

Tags : lakes ,Chennai ,districts ,Kanchi ,Tiruvallur ,Thiruvallur , Chennai, Kanchi, Tiruvallur, Public Works Department
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!