×

வடசென்னையில் தொடர் கைவரிசை பிக்பாக்கெட் கும்பல் சிக்கியது: 25 செல்போன்கள் பறிமுதல்

தண்டையார்பேட்டை: பாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டை, சென்ட்ரல், கொத்தவால்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் அபேஸ் செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பிக்பாக்கெட் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.  யானைகவுனி போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் செல்போன் பறிக்கும் கும்பலை சேர்ந்தவன் என்றும், இவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் எனவும், செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின் பேரில், சோழவரம் பகுதியில் பதுங்கி இருந்த 10 பேர் கொண்ட பிக்பாக்கெட் கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 25 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  பிடிபட்ட கும்பல் செல்போனை பறித்து எங்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள், இவர்களுடன் யாரேல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : North Chennai , Northcentral, pickpocket, 25 cell phones
× RELATED கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!!